கணவர் தற்கொலை செய்துகொண்ட விரக்தியில் பெண், மகனுடன் குளத்தில் குதித்து சாவு


கணவர் தற்கொலை செய்துகொண்ட விரக்தியில் பெண், மகனுடன் குளத்தில் குதித்து சாவு
x
தினத்தந்தி 4 Jan 2018 3:30 AM IST (Updated: 4 Jan 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

கணவர் தற்கொலை செய்து கொண்டதால் விரக்தி அடைந்த பெண் தனது மகனுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

மும்பை,

கணவர் தற்கொலை செய்து கொண்டதால் விரக்தி அடைந்த பெண் தனது மகனுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தாய், மகன் மாயம்

நவிமும்பை ஐரோலி பகுதியை பெண் ஷோபா(வயது32). இவரது மகன் அர்ஜூன்(5). ஷோபாவின் கணவர் பெயர் சந்திப். இவர் காசநோய் காரணமாக 2 வருடங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கணவர் தற்கொலை செய்துகொண்ட நாள் முதல் ஷோபா விரக்தியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஷோபா தனது மகனுடன் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இது குறித்து ஷோபாவின் உறவினர்கள் ராபலே போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தாய், மகனை தேடிவந்தனர்.

தற்கொலை

இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் பெண் மற்றும் சிறுவன் ஆகியோரின் உடல்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் தீயணைப்பு படையினரின் உதவியுடன் குளத்தில் பிணமாக மிதந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். இதில், பிணமாக மீட்கப்பட்டது மாயமான ஷோபா மற்றும் அவரது மகன் அர்ஜூன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், கணவர் இறந்ததில் இருந்து கடும் விரக்தியுடன் இருந்த வந்த ஷோபா சம்பவத்தன்று யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு தனது மகனுடன் வெளியேறி, அங்குள்ள குளத்தில் மகனுடன் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story