தேக்கம்பட்டி யானைகள் நல வாழ்வு முகாமிற்கு திருநள்ளாறு கோவில் யானை பிரக்ருதி புறப்பட்டது
தேக்கம்பட்டி யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாமுக்கு திருநள்ளாறு கோவில் யானை பிரக்ருதி சிறப்பு வழிபாடு நடத்தி வழியனுப்பி வைக்கப்பட்டது.
காரைக்கால்,
கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் கோவில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இந்த முகாமில் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற சனீஸ்வரபகவான் ஸ்தலமான தர்பாரண்யேஸ்வர சுவாமி கோவில் பெண் யானை ‘பிரக்ருதி’யும் கலந்துகொள்கிறது. முகாமில் கலந்துகொள்வதற்காக பிரக்ருதி, நேற்று மாலை திருநள்ளாறில் இருந்து லாரி மூலம் புறப்பட்டது.
சிறப்பு பூஜை
முன்னதாக தர்பாரண்யேஸ்வரசுவாமி கோவிலில் விக்னேஸ்வர பூஜை மற்றும் கஜ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அர்ச்சனை செய்து பிரக்ருதிக்கு வஸ்திரம் சாத்தி, மாலை அணிவிக்கப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பிரகார வலம் வந்து சுவாமியை நமஸ்காரம் செய்து வணங்கியது. நிகழ்ச்சியில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி விக்ரந்த் ராஜா மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தேக்கம்பட்டி புறப்பட்ட 14 வயதாகும் பெண் யானை பிரக்ருதியுடன் யானை பாகன்கள் முருகேசன், மணிகண்டன் மற்றும் தேவஸ்தானம் சார்பில் இளநிலை பொறியாளர் சரவணன், கால்நடை மருத்துவர் சம்பத் ஆகியோர் சென்றுள்ளனர்.
Related Tags :
Next Story