பெருநகர மாநகராட்சி எல்லைக்கு இணையாக சென்னை மாவட்டம் விரிவாக்கம் அடைந்தது


பெருநகர மாநகராட்சி எல்லைக்கு இணையாக சென்னை மாவட்டம் விரிவாக்கம் அடைந்தது
x
தினத்தந்தி 5 Jan 2018 4:30 AM IST (Updated: 5 Jan 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

பெருநகர மாநகராட்சி எல்லைக்கு இணையாக சென்னை மாவட்டம் விரிவாக்கம் அடைந்தது.

சென்னை,

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 55 வருவாய் கிராமங்கள், காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 67 வருவாய் கிராமங்கள் என மொத்தம் 122 வருவாய் கிராமங்களுடன் 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 3 வருவாய் கோட்டங்கள், 16 வட்டங்களை உள்ளடக்கிய பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தை தொடங்கி வைத்தார்.

3 கோட்டங்களாக...

அதன்படி விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தில் தண்டையார்பேட்டையை தலைமை இடமாகக் கொண்டு திருவொற்றியூர், மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய 5 வட்டங்களுடன், 32 வருவாய் கிராமங்களுடன் வடசென்னை கோட்டமும், அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் ஆகிய 6 வட்டங்களுடன், 47 வருவாய் கிராமங்களுடன் மத்திய சென்னை கோட்டமும், கிண்டியை தலைமையிடமாகக் கொண்டு மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 5 வட்டங்களுடன் 43 வருவாய் கிராமங்களுடன் தென்சென்னை கோட்டமும் அமையும்.

பல்வேறு வசதிகள், நலத்திட்டங்கள்

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மருத்துவ வசதிகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு, கல்வி தொடர்பான பணிகள், பேரிடர் மேலாண்மை தொடர்பான அரசின் நலத்திட்ட உதவிகள், தேர்தல் தொடர்பான பணிகள், சட்டம் மற்றும் ஒழுங்கு சார்ந்த பணிகள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், நிலம் தொடர்பான பணிகள் மற்றும் நலத்திட்டங்களை எளிதில் விரைவாகப் பெறமுடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story