தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாணவ–மாணவிகள் கல்விக்கடன் பெறுவதற்கு சிறப்பு முகாம் 12 இடங்களில் நாளை நடக்கிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவ–மாணவிகள் கல்விக்கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை(சனிக்கிழமை) 12 இடங்களில் நடக்கிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவ–மாணவிகள் கல்விக்கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை(சனிக்கிழமை) 12 இடங்களில் நடக்கிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
கல்விக்கடன் முகாம்தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவ–மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கு வசதியாக கல்விக்கடன் வழங்கப்படுகிறது. இந்த கல்விக்கடனை மாணவ–மாணவிகள் பெறுவதற்கு வசதியாக சிறப்பு முகாம் நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடத்தப்படுகிறது.
இந்த முகாம் தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவைகுண்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆழ்வார்திருநகரி இந்துமேல்நிலைப்பள்ளி, சாத்தான்குளம் டி.டி.டி.ஏ. புலமாடன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, உடன்குடி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கயத்தார் அரசு மேல்நிலைப்பள்ளி, விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஓட்டப்பிடாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 12 இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
சான்றிதழ்கள்இந்த முகாம்களில் கலந்து கொள்ளும் மாணவ–மாணவிகள், வங்கி கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்களை கொண்டு வர வேண்டும். அதன்படி இறுதியாக படித்த படிப்பின் மதிப்பெண் சான்றிதழ், மேற்படிப்பில் சேர்ந்ததற்கான ஆதாரம், மாணவ–மாணவிகள் மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள்–3, மாணவ–மாணவிகள் மற்றும் பெற்றோர், பாதுகாவலர், சாட்சியாளரின் பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இருப்பிட சான்று, ரேஷன்கார்டு நகல், மாணவ–மாணவிகள் இதற்கு முன்பு கல்வி உதவித் தொகை பெற்று இருந்தால் அதன் விவரம், படிப்பு கட்டணம், விடுதி கட்டணம் விவரம், சமீபத்தில் பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஊதிய சான்று, சுய தொழில் செய்பவர்கள் வருமான சான்று தாசில்தாரிடம் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.