3 பெண்களை திருமணம் செய்து நகைகளுடன் மாயமானவருக்கு 3½ ஆண்டு சிறை சைதாப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு


3 பெண்களை திருமணம் செய்து நகைகளுடன் மாயமானவருக்கு 3½ ஆண்டு சிறை சைதாப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 5 Jan 2018 5:00 AM IST (Updated: 5 Jan 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

சினிமா பாணியில் 3 பெண்களை திருமணம் செய்து நகைகளுடன் மாயமானவருக்கு 3½ ஆண்டு சிறை தண்டனை வழங்கி சைதாப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

ஆலந்தூர், 

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சந்தியா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் 2009-ம் ஆண்டு தேனாம்பேட்டை போலீசில் ஒரு புகார் செய்தார்.

அதில், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் மூங்கில் தொரப்பட்டு கிராமத்தை சேர்ந்த குமார்(வயது 38) என்பவர் தன்னை அனாதை என்றும், தொண்டு நிறுவனங்களில் ஆசிரியராக பணியாற்றுவதாகவும் கூறி திருமணம் செய்துகொண்டார். அப்போது வரதட்சணையாக 12 பவுன் நகை போடப்பட்டது. திருமணம் முடிந்ததும் இரவு கடலூர் சென்று தங்கினோம். மறுநாள் குமார் 12 பவுன் நகைகளுடன் மாயமாகிவிட்டார். சில மாதங்களுக்கு பின் மீண்டும் வந்து பணம் கேட்பதாக கூறியிருந்தார்.

மேலும் 2 பெண்கள்

இதுபற்றி தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குமாரை தேடிவந்தனர். அப்போது மேலும் 2 பெண்கள் குமார் தங்களையும் திருமணம் செய்துகொண்டு நகைகளுடன் மாயமாகிவிட்டதாக புகார் தெரிவித்தனர். இந்த வழக்கு சைதாப்பேட்டை பெருநகர 18-வது நீதிமன்றத்தில் நடந்தது.

8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குமாருக்கு நீதிமன்றத்தில் வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகனா வழங்கிய தீர்ப்பில், ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்ததை மறைத்து 3-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்த குமாருக்கு 3½ ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

‘நான் அவன் இல்லை’

இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் எட்விக் ஆஜரானார். இந்த சம்பவம் நடிகர் ஜீவன் நடித்து சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘நான் அவன் இல்லை’ என்ற சினிமாவில் வருவதுபோல் உள்ளது. 

Next Story