ஆவடி என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை வழக்கில் கல்லூரி பேராசிரியர்கள் 2 பேர் கைது
ஆவடியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை வழக்கில் கல்லூரி பேராசிரியர்கள் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஆவடி,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரி பைபாஸ் சாலை காமராஜர் தெருவை சேர்ந்தவர் வெங்கடாபதி. இவரது மகன் புருஷோத்தமன் (வயது18). இவர் ஆவடி அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி கல்லூரி 2-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் புருஷோத்தமன் தற்கொலை செய்து கொண்டார்.
தந்தை போலீசில் புகார்
இதுகுறித்து புருஷோத்தமனின் தந்தை வெங்கடாபதி தனது மகன் சாவுக்கு கல்லூரி நிர்வாகம் தான் காரணம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
2 பேராசிரியர்கள் கைது
விசாரணையில் ‘கல்லூரி பேராசிரியர்களான திருவள்ளூர் ம.பொ.சி தெருவை சேர்ந்த குழந்தைநாதன் (37), ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த சுதாகர் (30) ஆகிய இருவரும் சம்பவத்தன்று மாணவர் புருஷோத்தமனை காரணமில்லாமல் அழைத்து அடையாள அட்டையை பிடுங்கிக்கொண்டு கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த புருஷோத்தமன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது’ தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பேராசிரியர்கள் 2 பேர் மீதும் மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை நேற்று மாலை அம்பத்தூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story