நெல்லை– தென்காசி நாற்கர சாலை திட்டம்: சாலை விரிவாக்க பணிகள் மார்ச் மாதம் தொடங்கும்
நெல்லை– தென்காசி இடையே நாற்கர சாலை அமைப்பதற்காக, சாலை விரிவாக்க பணிகள் மார்ச் மாதம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாவூர்சத்திரம்,
நெல்லை– தென்காசி இடையே நாற்கர சாலை அமைப்பதற்காக, சாலை விரிவாக்க பணிகள் மார்ச் மாதம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலந்தாய்வு கூட்டம்நெல்லை– தென்காசி சாலையை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாற்கர சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. நிலம் கையகப்படுத்துவது குறித்து நில உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் தனி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமை தாங்கினார். கோட்ட பொறியாளர் வேல்ராஜ், உதவி பொறியாளர் சதீஷ்பாண்டியன், உதவி கோட்ட பொறியாளர் ஜெயராமன், தனி வட்டாட்சியர் சேதுராமலிங்கம், கல்லூரணி வருவாய் ஆய்வாளர் ஹமீதாபானு, கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் குணராமநல்லூர், குலசேகரப்பட்டி, கல்லூரணி ஆகிய வருவாய் கிராமங்களில் கையகப்படுத்தப்படும் நிலங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆயிரம் மீட்டர் நீளத்துக்கு பாலம்கூட்டத்தில், தற்போது உள்ள சாலையின் அகலம் நாற்கர சாலையாக மாற்றப்படும்போது, கட்டிடங்கள் குறைவாக உள்ள இடங்களில் 35 மீட்டர், அதிக கட்டிடங்கள் உள்ள இடங்களில் 25 மீட்டர், பாலம் கட்டும் இடங்களில் 31 மீட்டர் விரிவாக்கம் செய்யப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இங்கு அமைய உள்ள ரெயில்வே மேம்பாலம் ஆயிரம் மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
விரிவாக்க சாலை எந்த அளவுக்கு உருவாக்கப்படும், ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுப்பது உள்ளிட்டவை குறித்து பொறியாளர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.
சாலை விரிவாக்க பணிஇதில் கலந்து கொண்ட நில உரிமையாளர்கள் தரப்பில், கையகப்படுத்தப்படும் நிலம் மற்றும் கட்டிடங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் உயர்த்தப்பட்ட இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அடுத்த வாரம் முதல் சாலை விரிவாக்கத்துக்கான நிலம் குறியீடு இடப்படும் என்றும், சாலை விரிவாக்க பணிகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர். 2–வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.