கும்மிடிப்பூண்டி அருகே நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்த பூ வியாபாரி உடல் உறுப்புகள் தானம்
கும்மிடிப்பூண்டி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பூ வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் முருகேசன்(வயது46). இவர் கும்மிடிப்பூண்டி பஜாரில் பூக்கடை நடத்திவந்தார். இவருக்கு ராஜலட்சுமி(43) என்ற மனைவியும், கலைவாணி(24), துர்கா(23) என்ற 2 மகள்களும் உள்ளனர்.
கடந்த 2-ந் தேதி கவரைப்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் முருகேசன் சென்று கொண்டிருந்தார். அப்போது வேற்காடு என்ற இடத்தில் சென்றபோது அதே திசையில் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் முருகேசன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது.
உறுப்புகள் தானம்
இந்த விபத்தில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த முருகேசன் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் மூளைச்சாவு அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு உறுப்புகள் தானம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முருகேசன் குடும்பத்தாரின் ஒப்புதலுடன் அவரது இதயம், கல்லீரல், இரு கண்கள், மற்றும் இரு சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டன. இவை பாதிக்கப்பட்ட வேறு சிலருக்கு பொருத்தப்பட்டன.
Related Tags :
Next Story