மகதாயி நதிநீர் விவகாரம்: கோவா முதல்–மந்திரி வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும் சித்தராமையா பேட்டி
மகதாயி நதிநீர் விவகாரத்தில் கோவா முதல்–மந்திரி வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும் என்று சித்தராமையா கூறினார்.
ஹாசன்,
மகதாயி நதிநீர் விவகாரத்தில் கோவா முதல்–மந்திரி வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும் என்று சித்தராமையா கூறினார்.
வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும்முதல்–மந்திரி சித்தராமையா நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணமாக ஹாசன் மாவட்டத்திற்கு வருகை தந்தார். பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட அவர் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா ஹெனுகல் பகுதியில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்கினார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வடகர்நாடகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக மகதாயி நதியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று நான் பலமுறை கோவா மாநில முதல்–மந்திரி மனோகர் பாரிக்கருக்கு கடிதம் எழுதி உள்ளேன். ஆனால் அவர் நான் எழுதிய கடிதங்களுக்கு இதுவரை பதில் கடிதம் எழுதவில்லை.
ஆனால் மகதாயி நதியில் தண்ணீர் திறப்பது விஷயமாக மனோகர் பாரிக்கர், தனக்கு கடிதம் எழுதி உள்ளதாக எடியூரப்பா கூறி வருகிறார். மகதாயி நதிநீர் பிரச்சினையில் மனோகர் பாரிக்கரும், எடியூரப்பாவும் சேர்ந்து கொண்டு அரசியல் நாடகம் ஆடுகிறார்கள். மகதாயி நதியில் தண்ணீர் திறப்பது விஷயமாக மனோகர் பாரிக்கர் வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும்.
கனவு பலிக்காதுசட்டமன்ற தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வெற்றி பெற்று தான் முதல்–மந்திரி ஆனால், என்னை சிறைக்கு அனுப்புவதாக குமாரசாமி கூறியுள்ளார். அவர்கள் கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெற மாட்டார்கள். குமாரசாமி முதல்–மந்திரி ஆகிவிடலாம் என்று பகல் கனவு கண்டு வருகிறார். அது ஒருபோதும் பலிக்காது.
எத்தினஒலே குடிநீர் திட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. அரிசிகெரே தொகுதியின் வளர்ச்சிக்காக எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ. கேட்டு கொண்டதன்பேரில் ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது ஹாசன் மாவட்ட பொறுப்பு மந்திரி ஏ.மஞ்சு உள்பட பலர் உடன் இருந்தனர்.
தீபக் ராவ் கொலையில் பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள்
முதல்–மந்திரி சித்தராமையா குற்றச்சாட்டு
ஹாசன் மாவட்டம் அரிசிகெரேயில் முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள காட்டிபள்ளா பகுதியில் பா.ஜனதா தொண்டரான தீபக் ராவ் நேற்று(அதாவது நேற்று முன்தினம்) கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை உடனடியாக போலீசார் கைது செய்து உள்ளனர். ஆனால் இந்த கொலைக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி ராமலிங்கரெட்டி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர். இது சரியல்ல.
மாநிலத்தில் மதக்கலவரங்களை ஏற்படுத்தி அதில் அரசியல் லாபம் பெற பா.ஜனதாவினர் முயற்சி செய்கின்றனர். அவர்கள் தான் மக்களிடம் பிரச்சினைகளை தூண்டிவிடுகின்றனர். தீபக் ராவ் கொலையில் பா.ஜனதாவினர் அரசியல் செய்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது.