கிருமாம்பாக்கத்தில் மருத்துவ மாணவர் தற்கொலை


கிருமாம்பாக்கத்தில் மருத்துவ மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 5 Jan 2018 3:30 AM IST (Updated: 5 Jan 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

கிருமாம்பாக்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பாகூர்,

ஆந்திர மாநிலம் திருப்பதி உபத்யாயா நகரை சேர்ந்தவர் கங்கா ரெட்டி. மின்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது சகோதரர் பாஸ்கர் என்பவரின் மகன் மனீஷ்குமார் ரெட்டியை சிறு வயதில் தத்தெடுத்து வளர்த்தார்.

மனீஷ்குமார் ரெட்டி, புதுவை மாநிலம் கிருமாம்பாக்கம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 4-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் கல்லூரிக்கு சரியாக செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இதுபற்றி கல்லூரி நிர்வாகம், கங்கா ரெட்டிக்கு போன் செய்து, தகவல் தெரிவித்தது. இதையடுத்து கங்காரெட்டி புதுவை வந்து மனீஷ்குமார் ரெட்டியிடம் விசாரிப்பதாக கூறினார். இதை அறிந்து மனமுடைந்த மனீஷ்குமார் ரெட்டி, வளர்ப்பு தந்தை கண்டிப்பாரே என்ற பயத்தில் இருந்துள்ளார்.

தற்கொலை

இந்தநிலையில் வாடகை வீட்டில் உடன் தங்கியிருந்த நண்பர்கள் வெளியே சென்ற நேரத்தில் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மனீஷ்குமார் ரெட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நண்பர்கள் திரும்பி வந்தபோது கதவை தட்டியபோது திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து பார்த்தபோது மனீஷ்குமார் ரெட்டி மின் விசிறியில் கயிற்றில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.

இதை கண்டு திடுக்கிட்ட நண்பர்கள், உடனே கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மனீஷ்குமார் ரெட்டியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

கடிதம் சிக்கியது

மனீஷ்குமார் ரெட்டி தங்கி இருந்த வீட்டை சோதனை செய்தபோது, அவர் எழுதியிருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் ‘பெற்றோருக்கும், வளர்ப்பு தந்தைக்கும் நல்ல மகனாக நடந்துகொள்ளவில்லை. தங்கைக்கு நல்ல அண்ணனாக இருக்கவில்லை. இதனால் இந்த உலகத்தை விட்டு செல்கிறேன்’ என்று உருக்கமாக எழுதி இருந்தது.

மனீஷ்குமார் ரெட்டி சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story