ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5,495 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.106 கோடி கடன்


ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5,495 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.106 கோடி கடன்
x
தினத்தந்தி 5 Jan 2018 3:45 AM IST (Updated: 5 Jan 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்து 495 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.106 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரித்தார்.

ஈரோடு,

கோபிசெட்டிபாளையத்தில் வட்டார அளவிலான வங்கியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பல்வேறு துறைகளின் சார்பில் புதிய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவி குழுக்கள் புதிய தொழில் தொடங்க மகளிர் திட்டம் மூலம் விண்ணப்பித்து உள்ளனர். அந்த விண்ணப்பத்தினை மகளிர் திட்டம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பங்கள் பல்வேறு வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கடன் வழங்க பரிந்துரை செய்யப்படுகிறது.

அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட விண்ணப்பங்களின் மீது வங்கிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு காலதாமதமின்றி அவர்களுக்கு வழங்க வேண்டிய கடன் உதவியை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தொழில் மையம்

அதேபோல் தாட்கோ, மாவட்ட தொழில் மையம், முத்ரா மூலம் பரிந்துரைக்கப்படும் தனிநபர் தொழில் தொடங்க கடன் வழங்கும் விண்ணப்பத்தினையும் உரிய முறையில் ஆய்வு செய்து கடன் வழங்க வங்கியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வங்கியாளர்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது அவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துணை கலெக்டர் நிலையில் ஒரு அலுவலரும், அந்தந்த வங்கியின் மண்டல மேலாளர் மற்றும் கிளை மேலாளரும் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தனிநபருக்கு காலதாமதமின்றி கடன் கிடைத்திட ஏதுவாக இருக்கும்.

ரூ.106 கோடி

அனைத்து வங்கியாளர்களும் தங்களுக்கு பரிந்துரை செய்யப்படும் விண்ணப்பத்தினை உரிய கால அளவிற்குள் ஆய்வு செய்து விண்ணப்பதாரர்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கியாளர்கள் தினந்தோறும் எவ்வளவு விண்ணப்பத்திற்கு தீர்வு காண்கிறார்கள் என்பதை தினந்தோறும் ஆய்வு செய்து வருகிறோம்.

ஈரோடு மாவட்டத்தில் 2017-2018-ம் நிதி ஆண்டில் 5 ஆயிரத்து 495 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.106 கோடி நேரடி கடன் உதவியும், தாட்கோ மூலம் 162 பேருக்கு ரூ.1 கோடியே 15 லட்சம் தனிநபர் கடனும் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற கடன் உதவிகள் வழங்கப்படுவதன் மூலம் ஈரோடு மாவட்டம் பொருளாதார வளர்ச்சி மிக்க மாவட்டமாக திகழும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

கூட்டத்தில் நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் அபூவராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், கோபி ஆர்.டி.ஓ கோவிந்தராஜன் மற்றும் வங்கி மேலாளர்கள் கலந்துகொண்டனர். 

Next Story