ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் திருச்சி மாவட்டத்தில் அரசு பஸ்கள் ஓடவில்லை


ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் திருச்சி மாவட்டத்தில் அரசு பஸ்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 6 Jan 2018 4:15 AM IST (Updated: 6 Jan 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் திருச்சி மாவட்டத்தில் அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ–மாணவிகள் கடும் அவதிப்பட்டனர்.

திருச்சி,

போக்குவரத்து ஊழியர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாததால், அரசு பஸ் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். திருச்சியிலும் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று 2–வது நாளாக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி உட்கோட்டத்தில் இருந்து தினமும் 976 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவற்றில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் வேலைநிறுத்த போராட்டத்தால் நேற்று திருச்சி மாவட்டத்தில் 99 சதவீதம் அரசு பஸ்கள் ஓடவில்லை. ஒரு சில பஸ்கள் ஓடின. அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டக்டர்களை வைத்து பஸ்களை இயக்க அதிகாரிகள் நேற்று காலை நடவடிக்கை எடுத்தனர். அதன்படி ஒரு சில பஸ்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ்கள் புறப்பட தயாராகி டிரைவர்கள் பஸ்சை இயக்க முற்பட்டனர். அப்போது மற்ற தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் புறப்பட தயாராக இருந்த பஸ்கள் முன்பு கூடி மறித்தனர். இதைத்தொடர்ந்து பஸ்கள் பஸ் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு, அதில் இருந்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் கண்டோன்மெண்ட் மற்றும் மலைக்கோட்டை ஆகிய பணிமனைகளுக்கு பஸ்சை கொண்டு சென்று வரிசையாக நிறுத்திவைத்தனர். இதனால் நேற்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் அவதிப்பட்டனர். இதேபோன்று பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளும் கடும் அவதியடைந்தனர்.

குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவிகளுக்கு அரசு இலவச பஸ் பயண அட்டை வழங்கி உள்ளது. இதன்மூலம் நகரில் உள்ள ஏராளமான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மாணவ–மாணவிகள் செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் தொடங்கிய வேலைநிறுத்த போராட்டம் சரியாகி விடும் என்று, மாணவ–மாணவிகள் நேற்று பள்ளிக்கு செல்ல அவரவர் வீட்டில் இருந்து புறப்பட்டு பஸ் நிறுத்தத்திற்கு வழக்கமான நேரத்திற்கு வந்து காத்திருந்தனர்.

ஆனால் அரசு டவுன் பஸ்கள் வரவில்லை. வெகுநேரம் காத்திருந்த அவர்களில் ஒரு சிலர் தங்களது உறவினர், நண்பர்களின் இருசக்கர வாகனம் மூலம் பள்ளிக்கு சென்றனர். பல மாணவ–மாணவிகள் அந்த வழியாக வந்த தனியார் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளிக்கு சென்றனர். இந்தநிலையில் வெகுநேரம் ஆகியும் அரசு டவுன் பஸ்கள் வராததால் ஆங்காங்கே காத்திருந்த அரசு பள்ளி மாணவ–மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் தங்கள் வீட்டிற்கு திரும்பி சென்றனர். இதனால் நேற்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 40 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. ஒவ்வொரு தனியார் பஸ்சிலும் உட்கார்ந்தும், நின்றுகொண்டும், படிக்கட்டில் தொங்கியபடியும் சுமார் 150–க்கும் மேற்பட்டவர்கள் சென்றனர். அதேபோன்று மாநகர் பகுதியில் ஷேர் ஆட்டோக்களிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தனியார் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நேற்று பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. இதனால் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்ததாக பயணிகள் புகார் கூறினர். பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் நேற்று திருச்சி மாநகர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள், மாணவ–மாணவிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் கண்டோன்மெண்ட், மலைக்கோட்டை ஆகிய பணிமனைகள் முன்பு தற்காலிக பணிக்கு டிரைவர்கள், கண்டக்டர்கள் தேவை என்ற விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மத்திய பஸ் நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் டிரைவர், கண்டக்டர்கள் தேவை என்றும், தகுதி உடையவர்கள் அரசு பணிமனைக்கு உரிய சான்றிதழுடன் நேரில் வரவேண்டும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டது.


Next Story