துறையூரில் அரசு போக்குவரத்து கழக பணிமனையை மூடியதால் பரபரப்பு
துறையூரில் அரசு போக்குவரத்து கழக பணிமனையை மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
துறையூர்,
அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் மற்றும் தொழில் நுட்ப பிரிவை சேர்ந்த ஊழியர்களின் 13–வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந் நிலையில், திருச்சி மாவட்டம், துறையூர் அரசு போக்குவரத்து கிளை பணிமனையை சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி – துறையூர் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒன்று கூடி, வேலைக்கு செல்லாமல் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இதில் சி.ஐ.டி.யூ. நிர்வாகி மருதமுத்து பேசும்போது, எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என கூறினார். மேலும் துறையூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் துறையூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையை சிலர் மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து கழக தொழிலாளர்களின் போராட்டத்தின் காரணமாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அன்றாட வேலைக்கு சென்று வரும் கூலி தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் துறையூர் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனையின் முன்புறம் தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கான தேர்வு செய்வதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.