வேலூர் மாவட்டத்தில் 2–வது நாளாக அரசு பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது
போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று வேலூர் மாவட்டத்தில் 2–வது நாளாக அரசு பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோக்களில் பொதுமக்கள் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், குடியாத்தம், ஆற்காடு, சோளிங்கர், பேரணாம்பட்டு, ஆம்பூர் உள்பட 9 இடங்களில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் இருந்து தினமும் 723 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் 254 டவுன் பஸ்கள் ஆகும். இந்த பணிமனைகள் மூலம் டிரைவர், கண்டக்டர்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 500 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து தொ.மு.ச. உள்பட 13 தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று முன்தினம் இரவே வேலூரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது. 2–வது நாளான நேற்று அதிகாலையில் ஒரு சில அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. நேரம் செல்ல செல்ல அரசு பஸ்கள் முழுவதும் ஓடவில்லை. மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே உள்ள பணிமனைகளில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் அரசு பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்த கோரிக்கையை வலியுறுத்தி கொணவட்டம் பணிமனையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பஸ் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பஸ்கள் ஓடாது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொண்டதால் பெரும்பாலானவர்கள் நேற்று வெளியூர்களுக்கு செல்வதை தவிர்த்து விட்டனர். இதனால் வேலூர் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. ஒரு சில அரசு பஸ்கள் மட்டும் இயங்கின. பயணிகளின் வசதிக்காக தனியார் பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டது.
குறிப்பாக சென்னைக்கு வேலூரில் இருந்து அதிக அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் நேற்று தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக வேலூரில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் வேலூரில் இருந்து சென்னைக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டது. இதற்கு ஒரு நாளைக்கு ரூ.1,050 கட்டணமாக செலுத்தி தற்காலிக உரிமம் பெற்று தனியார் பஸ்கள் இயக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தனியார் பஸ்களாக காட்சியளித்தன.
அதேபோன்று பெங்களூரு செல்லும் பஸ்களும் ஓடாததால் ஓசூர் வரை கூடுதலாக தனியார் பஸ்கள் இயக்கப்பட்டது. கிராமப்புறங்களில் இருந்து டவுன் பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ– மணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்களில் செல்லும் நிலை ஏற்பட்டது. தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர். கர்நாடக மாநில பஸ்கள் மற்றும் ஆந்திர மாநில பஸ்கள் வழக்கம்போல ஓடியது. அரசு பஸ்கள் ஓடாததால் நேற்று ரெயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பஸ்நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வேலூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் நேற்று இயங்காததால் வேலூர் பழைய பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் எஸ்.ஏ.ராமன் ஆகியோர் நேற்று காலையில் புதிய பஸ் நிலையம், கொணவட்டம் பணிமனை ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:–
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் முறியடிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்கள் 100 சதவீதம் இயங்காவிட்டாலும், போதுமான அளவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்ணா தொழிற்சங்கத்தினரை பணிசெய்யவிடாமல் தடுப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 30 முதல் 40 சதவீதம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் தற்காலிக டிரைவர்களை கொண்டு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.