ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை பொதுமக்கள் கடும் பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர்.
ஈரோடு,
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 13 சங்கங்கள் ஏற்க மறுத்ததால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று முன்தினம் மாலை முதல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று 2–வது நாளாக தொடர்ந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் ஒரு சில டவுன் பஸ்கள் மட்டும் ஓடியது. இதனால் அனைத்து ஊர்களுக்கும் செல்ல முடியாமல் பயணிகள் தவித்தார்கள். நேற்று காலை வேலைநிறுத்த போராட்டம் என்று தெரியாமல் பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர்.
ஈரோடு, கோவையில் இருந்து ஒரு சில அரசு பஸ்கள் நேற்று அதிகாலை சத்தியமங்கலம் வந்தன. காலை 7.30 மணிக்கு மேல் சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு, கோவைக்கு தலா 3 பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் தனியார் பஸ்கள் அனைத்தும் ஈரோடு, மைசூருக்கு சென்று வந்தன. அத்தாணி, பவானிசாகர் ஆகிய கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் குறைவாக ஓடின. அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் மிக குறைவாக இருந்தது.
சத்தியமங்கலம் போக்குவரத்து பணிமனையில் 25 டவுன் பஸ்களும், 51 வெளியூர் பஸ்களும், மாற்று பஸ்கள் 8–ம் என மொத்தம் 84 பஸ்கள் உள்ளன. இதில் பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த 30 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. அ.தி.மு.க. தொழிற்சங்கத்தினரே பஸ்களை இயக்கி வருகிறார்கள். மற்ற கூட்டமைப்பு தொழிலாளர்கள் 100–க்கும் மேற்பட்டவர்கள் பணிமனைக்கு வெளியில் அமைதியான முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இதையொட்டி பணிமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கோபி அரசு போக்குவரத்து கழக கிளையில் 80 பஸ்கள் உள்ளன. இதில் கோபி, சத்தியமங்கலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. நம்பியூர், கெம்பநாயக்கன்பாளையம், கொங்கர்பாளையம், அந்தியூருக்கு குறைவான பஸ்களே இயக்கப்பட்டன.
இதேபோல் தாளவாடி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 30–க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு 14 பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. நேற்று பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவ–மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் அவதிப்பட்டார்கள். பஸ்கள் வராததால் ஒரு சில மாணவ–மாணவிகள் காலை 10 மணிக்கு மேல் வீட்டுக்கு சென்றுவிட்டார்கள். அதனால் பள்ளிக்கூடத்துக்கு மாணவ, மாணவிகள் வருகை குறைவாக இருந்தது.
பெருந்துறையில் இருந்து ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை ஆகிய ஊர்களுக்கு 50 சதவீத பஸ்களே இயக்கப்பட்டன.
புஞ்சைபுளியம்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதியடைந்தார்கள். டவுன் பஸ்கள் 3–ம், சத்தியமங்கலத்தில் இருந்து புஞ்சைபுளியம்பட்டி வழியாக கோவைக்கு இயக்கப்படும் பஸ்களும் இயக்கப்படவில்லை. தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பயணிகள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்தார்கள்.
நம்பியூர் பணிமனையில் இருந்து 71 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் நேற்று 40 பஸ்கள் இயக்கப்படவில்லை. 31 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. இதனால் கோவை, திருப்பூர், மேட்டூர், ஊட்டிக்கு செல்லும் பயணிகள் அவதியடைந்தார்கள். தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கொடுமுடி பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு குறைவான பஸ்கள் இயக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் 90 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர்.