சின்னத்தம்பிபாளையம் ஊராட்சி வார்டு மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு, பொதுமக்கள் சாலை மறியல்
உள்ளாட்சி தேர்தல் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் வார்டுகளை தேர்தல் ஆணையம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
அந்தியூர்,
உள்ளாட்சி தேர்தல் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் வார்டுகளை தேர்தல் ஆணையம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்னத்தம்பிபாளையம் ஊராட்சியின் ஒரு பகுதி மற்றும் அதன் 11–வது வார்டில் உள்ள மஞ்சாளநாயக்கனூர், புதுமஞ்சாளநாயக்கனூர், அத்திமரத்தூர் ஆகிய பகுதிகள் நகலூர் ஊராட்சி 11–வது வார்டில் சேர்க்கப்பட்டது.
இதற்கு சின்னத்தம்பிபாளையம் ஊராட்சி 11–வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100–க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 3 மணிஅளவில் அந்தியூர்–சத்தி மெயின்ரோட்டில் உள்ள நகலூர் பிரிவில் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார், வட்டார வளர்ச்சி அதிகாரி சுந்தர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரி கூறும்போது, ‘உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள். நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தார்.
அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் 4 மணி அளவில் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.