திண்டுக்கல் மாவட்டத்தில் 95 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் 95 சதவீத அரசு பஸ்கள் ஓடாததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 13–வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அடிப்படை சம்பளத்தில் இருந்து 2.57 காரணி மடங்காக ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அரசு தரப்பில் 2.35 காரணி மடங்கு மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன், 47 தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதைத் தொடர்ந்து நேற்று 2–வது நாளாக மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் மாலை 6 மணி முதலே டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிட்ட போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கி விட்டனர். திண்டுக்கல், வேடசந்தூர், வத்தலக்குண்டு, நத்தம் உள்பட மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் இயங்கி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக நேற்று காலையிலும் பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. ஒருசில ஊழியர்கள் மட்டும் வேலைக்கு வந்தனர். டிரைவர்கள், கண்டக்டர்கள், அலுவலக பணியாளர்கள், தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள் என சுமார் 2 ஆயிரத்து 800 பேர் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதனால் ஒவ்வொரு பணிமனையில் இருந்தும் 2 முதல் அதிகபட்சம் 4 பஸ்கள் வரை மட்டுமே இயக்கப்பட்டன. பெரும்பாலான பஸ்கள் பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் 95 சதவீதத்துக்கு மேல் பஸ்கள் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் தனியார் பஸ்கள், மினிபஸ்கள் அனைத்தும் இயக்கப்பட்டன.
எனினும், அரசு பஸ்கள் ஓடாததால் அனைத்து தனியார் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. வேலைநிறுத்தம் காரணமாக நேற்று பல கிராமங்களுக்கு பஸ்கள் செல்லவில்லை.
இதன் காரணமாக கிராம மக்கள், நகரங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். ஆட்டோக்கள், மினிவேன்கள், சரக்கு வாகனங்களில் கிராம மக்கள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் ஏராளமான சிறு விவசாயிகள் அரசு பஸ்களில் காய்கறிகள், பூக்களை மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். பஸ்கள் ஓடாததால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டனர்.
இதுதவிர அரசு, தனியார் ஊழியர்களும் உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் பெரும் தவிப்புக்கு ஆளாகினர். பஸ்கள் ஓடாததால் பஸ் நிலையம், முக்கிய சாலைகள் பரபரப்பான போக்குவரத்து, வழக்கமான நெரிசல் இல்லாமல் காணப்பட்டது.
திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் இருந்து உள்ளூர், வெளியூர்களுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. ஒன்றிரண்டு அரசு பஸ்களும் சென்றன. ஆனால், மதுரை, பழனி, திருச்சி, ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற ஊர்களுக்கு போதிய அளவில் பஸ்கள் செல்லவில்லை. இதனால் வெளியூர் மக்கள் பஸ் நிலையத்தில் நீண்டநேரம் காத்திருந்து தவித்தனர்.
பின்னர் அவ்வப்போது வந்து சென்ற தனியார் பஸ்களில் சிரமப்பட்டு இடம் பிடித்து சென்றனர். ஒட்டுமொத்தமாக போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.
தமிழக அரசு மாணவர்களின் நலன்கருதி இலவச பயண அட்டை வழங்கி இருக்கிறது. கிராமப்புற பகுதிகளை சேர்ந்த ஏழை மாணவ, மாணவிகள் அதன் மூலம் இலவசமாக பயணித்து வருகின்றனர். நேற்றைய தினம் அரசு பஸ்கள் இயங்காததால் மாணவ, மாணவிகள் பெரும் சிரமம் அடைந்தனர். இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வேன்களில் அதிக கட்டணம் கொடுத்து பள்ளிக்கு சென்றனர். மேலும் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் திணறினர்.