கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை, லஞ்சம் வாங்கியதாக பெண் துணை கலெக்டர் மீது வழக்கு


கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை, லஞ்சம் வாங்கியதாக பெண் துணை கலெக்டர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 Jan 2018 4:30 AM IST (Updated: 6 Jan 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.43 ஆயிரத்து 500 சிக்கியது.

கடலூர்,

கடலூர் புதிய கலெக்டர் அலுவலகத்தின் 2–வது மாடியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி அலுவலகம் உள்ளது. இங்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரியாக துணை கலெக்டர் ரதி என்ற லட்சுமி பணியாற்றி வருகிறார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் மாவட்டம் முழுவதும் 64 இடங்களில் மாணவர் விடுதிகள் செயல்படுகிறது. இந்த விடுதிகளுக்கு பொருட்கள் வாங்குவதற்காக அரசால் வழங்கப்படும் தொகையில் குறிப்பிட்ட தொகை கமி‌ஷனாக அதிகாரிகளுக்கு கைமாறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனால் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி மற்றும் வார்டன்களின் நடவடிக்கைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் விருத்தாசலம் பகுதியில் உள்ள 27 விடுதி வார்டன்களிடம் இருந்து வசூலித்த தொகையை துணை கலெக்டரிடம் வழங்குவதற்காக வார்டன்கள் அசோகன், கணேசமூர்த்தி, மதியழகன் ஆகியோர் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்துக்கு நேற்று வந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து.

இதையடுத்து உஷாரான லஞ்சஒழிப்பு போலீசார் மதியம் 1 மணி அளவில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி அலுவலகத்துக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.43 ஆயிரத்து 500 சிக்கியது.

இது தொடர்பாக துணை கலெக்டர் ரதியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். ஆனால் அந்த பணத்துக்கும் தனக்கும் சம்பந்தம் ஏதும் இல்லையென்று அவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்தாராம். மேலும் 3 வார்டன்களையும், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களையும் மற்றொரு அறைக்குள் அமர வைத்து, அவர்களை ஒவ்வொருவராக துணை கலெக்டர் அறைக்கு வரவழைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். இரவு 8 மணி அளவில் விசாரணையை முடித்துக்கொண்டு துணை சூப்பிரண்டுகள் சரவணக்குமார், தேவநாதன், இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சதீஷ் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் புதிய கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்கள்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் சிக்கிய துணை கலெக்டர் ரதி தட்டச்சராக பணியை தொடங்கி படிப்படியாக பதவி உயர்வு பெற்று துணை கலெக்டராக உள்ளார். இவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பணியின் நிமித்தமாக கடந்த சில மாதங்களாக கடலூர் செம்மண்டலத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார். அவரது அறையிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

வார்டன்களிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக துணை கலெக்டர் ரதி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிகிறது. புதிய கலெக்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையால் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story