கொடுங்கையூரில் பெயிண்டரை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது
கொடுங்கையூரில் பெயிண்டரை கொலை செய்ததாக அவரது மனைவி கள்ளக்காதலனுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பெரம்பூர்,
சென்னை கொடுங்கையூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 38). பெயிண்டரான இவர் வசந்தி (30) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார். இதற்கிடையில் வசந்திக்கும், செங்குன்றத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதனால் அவர் தனது கணவரை விட்டுப்பிரிந்து, மகளுடன் கள்ளக்காதலன் ரமேசுடன் சென்று செங்குன்றத்தில் வசித்துவருகிறார். மகளை தன்னுடன் அனுப்பிவைக்கும்படி கேட்டும் வசந்தி சம்மதிக்காததால், இதற்கு உதவி செய்யும்படி செங்குன்றத்தில் வசித்துவரும் வசந்தியின் தம்பி கார்த்திக்கிடம் (30) உதயகுமார் கேட்டார்.
குத்திக்கொலை
இதுதொடர்பாக 2 பேரும் கடந்த மாதம் 21-ந்தேதி இரவு கொடுங்கையூரில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது அருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மதுபோதையில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த கார்த்திக், உதயகுமாரை கத்தியால் குத்திக்கொலை செய்தார்.
போதையில் ரத்தக்கறையுடன் சுற்றித்திரிந்த அவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது இந்த விவரத்தை கூறினார். இதையடுத்து போலீசார் கார்த்திக்கை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
மகளை தன்னுடன் அனுப்பிவைக்கும்படி உதயகுமார் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் தனது கணவரை கொலை செய்ய வசந்தி முடிவு செய்தார். வசந்தி, அவரது தம்பி கார்த்திக், கள்ளக்காதலன் ரமேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து இதற்காக திட்டம் போட்டனர். அதன்படி கார்த்திக், உதயகுமாரை மதுக்கடைக்கு அழைத்துச்சென்று அளவுக்கு அதிகமாக குடிக்கவைத்து போதை அதிகமானதும் கொலை செய்தது தெரியவந்தது.
கள்ளக்காதலனுடன் கைது
இதையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் அரிகரபுத்திரன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தலைமறைவாக இருந்த வசந்தி, கள்ளக்காதலன் ரமேஷ் ஆகிய 2 பேரையும் தேடிவந்தனர். ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் காசிரெட்டிபட்டி கிராமத்தில் பதுங்கி இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாயின் கள்ளக்காதலால் தந்தையை பறிகொடுத்ததுடன், தாயும் சிறைக்கு சென்றுவிட்டதால் அவர்களின் 9 வயது மகள் அனாதையாக நிற்பதை கண்டு அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story