இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி


இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 6 Jan 2018 3:15 AM IST (Updated: 6 Jan 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

சிக்கமகளூரு,

இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

முதல்-மந்திரி சித்தராமையா

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைப்பதற்காகவும், அங்கு நடைபெறும் காங்கிரஸ் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று ஹாசனில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மூடிகெரேவுக்கு வந்தார். மூடிகெரேவில் உள்ள ஒப்ளிகர் அரசு பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் வந்து இறங்கிய அவர், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்

இந்த ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் அடுத்த மாதம்(பிப்ரவரி) 16-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும். மகதாயி போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. மகதாயி பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து கர்நாடக அரசு சார்பில் கடந்த மாதம்(டிசம்பர்) 21-ந் தேதியே மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினோம்.

ஆனால் மத்திய அரசிடம் இருந்து இதுவரை மகதாயி பிரச்சினை தொடர்பாக எந்தவொரு பதிலும் வரவில்லை. கோவா மாநில அரசு, தங்கள் மாநிலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், விவசாயிகள் வறட்சியின் பிடியில் உள்ளதாகவும் கூறுகிறது. அதனால் தங்கள் மாநிலத்திற்கு தேவையான தண்ணீர் போக மீதி இருந்தால் அதை கர்நாடகத்திற்கு கொடுப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என்றும் தெரிவித்திருக்கிறது.

கோவா அரசுக்கு கடிதம்

இந்த நிலையில், கர்நாடகத்தில் உள்ள குடிநீர் பிரச்சினை குறித்தும், அதனால் கர்நாடகத்திற்கு தண்ணீர் வழங்கும்படியும், மகதாயி பிரச்சினையில் சுமுக தீர்வு ஏற்பட பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தும் கடந்த 14 நாட்களுக்கு முன்பு கோவா மாநில அரசுக்கு கடிதம் எழுதினேன்.

ஆனால் கோவா அரசிடம் இருந்து அதுபற்றி எந்தவொரு விளக்கமோ?, பதிலோ? இதுவரையில் வரவில்லை. தொடர்ந்து மாநிலத்தில் பல இடங்களில் இந்துக்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக பா.ஜனதா கூறுகிறது. நானும் இந்து தான். இங்கு கூடியிருக்கும் பலரும் இந்துதான்.

கண்டிக்கத்தக்கது

சிலர் சொந்த பிரச்சினைக்காக கொலை செய்து விடுகிறார்கள். உடனே அதை பா.ஜனதாவினர் அரசியல் ஆக்குகிறார்கள். கொலை செய்யப்பட்டவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. ஒரு குறிப்பிட்ட முஸ்லிம் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் உள்பட பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

அந்த அமைப்பு மட்டும் கிடையாது, சாதி, மத கலவரங்களை தூண்டும் அனைத்து அமைப்புகளையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கர்நாடக அரசு சார்பில் கோரிக்கை வைக்க உள்ளோம்.

பணிகள் விரைவாக முடிவடையும்


தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் தீபக் ராவ் கொலை செய்யப்பட்டது குறித்து அறிந்தேன். அது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. தீபக் ராவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது நான் தொடங்கி வைத்து வரும் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் விரைவாக முடிவடையும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

வெட்டிப்பேச்சு

“நான் நல்லாட்சி நடத்துவேன், அதை ரத்தத்தில் வேண்டுமானாலும் எழுதி தருகிறேன்” என்று எடியூரப்பா சூளுரைத்துள்ளார். அவரது பேச்சு வெட்டிப்பேச்சு. வெட்டிப்பேச்சு வேலைக்கு ஆகாது. அவரது ஆட்சியில்தான், பா.ஜனதா மந்திரிகள் சிறைக்கு சென்றனர். ஏன் அவரே ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றார். புனிதமாக கருதப்படும் விதான சவுதாவில் வைத்து பா.ஜனதா மந்திரிகள் ஆபாச படம் பார்த்தனர். அதை மக்கள் யாரும் மறந்துவிடவில்லை.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

Next Story