புனே கலவரத்துக்கு இந்து அமைப்புகளே காரணம் சரத்பவார் குற்றச்சாட்டுக்கு அவரது கட்சி எம்.பி. மறுப்பு


புனே கலவரத்துக்கு இந்து அமைப்புகளே காரணம் சரத்பவார் குற்றச்சாட்டுக்கு அவரது கட்சி எம்.பி. மறுப்பு
x
தினத்தந்தி 6 Jan 2018 3:30 AM IST (Updated: 6 Jan 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

புனே வன்முறைக்கு இந்து அமைப்புகள் தான் காரணம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

மும்பை,

புனே வன்முறைக்கு இந்து அமைப்புகள் தான் காரணம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதனை அவரது கட்சியை சேர்ந்த உதயன்ராஜே போ‌ஷலே எம்.பி. மறுத்தார்.

கலவரம்

புனே மாவட்டம் பீமா– கோரேகாவ் போர் நினைவுச்சின்னம் அருகே கடந்த 1–ந் தேதி இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில், வாலிபர் ஒருவர் பலியானார். இந்த மோதல் மாநிலம் முழுவதும் பரவி வன்முறைக்கு வித்திட்டது. குறிப்பாக மும்பையில் பஸ், ரெயில் போக்குவரத்து முடங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு சமஸ்த் இந்து அகாடி அமைப்பை சேர்ந்த மிலிந்த் ஏக்போதி மற்றும் சிவ பிரதிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஷாம்பாஜி பீடே ஆகியோர் தான் காரணம் என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.

சரத்பவார் குற்றச்சாட்டு

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், வெளியாட்கள் மராட்டியத்துக்குள் வந்து, உள்ளூர் மக்களின் ஆத்திரத்தை தூண்டியதாகவும், ஆண்டுதோறும் போர் நினைவு தினத்தன்று கொண்டாட்டம் நடைபெற்ற போதிலும், இதுபோல் வன்முறை ஏற்பட்டதாக வரலாறு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

உதயன்ராஜே போ‌ஷலே எம்.பி. மறுப்பு

இந்த நிலையில், தேசியவாத காங்கிரசை சேர்ந்த எம்.பி.யும், சத்ரபதி சிவாஜி வழித்தோன்றலுமான உதயன்ராஜே போ‌ஷலே, சரத்பவாரின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார். இது தொடர்பாக அவர் மராத்தி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மிலிந்த் ஏக்போதி என்னுடைய நண்பர். பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான எதையும் பேச வேண்டாம் என்று அவரிடம் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். மிலிந்த் ஏக்போதியுடன் நான் பேசினேன். அப்போது புனே வன்முறைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி அவர் அழுதார்.

மேலும், பீமா– கோரேகாவ் நினைவுச்சின்னம் அருகே வாது பூத்ரக் கிராமத்தில் உள்ள சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் ஷாம்பாஜியின் கல்லறையை சுத்தம் செய்வதற்காக தான், அங்கு சென்றதாக மிலிந்த் ஏக்போதி என்னிடம் கூறினார்.

இவ்வாறு உதயன்ராஜே போ‌ஷலே எம்.பி. தெரிவித்தார்.


Next Story