சத்தாராவில் சொகுசு பஸ் பயணிகள் கூட்டத்தில் புகுந்து பெண் சாவு டிரைவரும் பலியானார்
சத்தாராவில் சொகுசு பஸ் பயணிகள் கூட்டத்தில் புகுந்ததில் பெண் உயிரிழந்தார். அந்த பஸ் டிரைவரும் இந்த விபத்தில் பலியானார்.
புனே,
சத்தாராவில் சொகுசு பஸ் பயணிகள் கூட்டத்தில் புகுந்ததில் பெண் உயிரிழந்தார். அந்த பஸ் டிரைவரும் இந்த விபத்தில் பலியானார்.
சொகுசு பஸ்மும்பையில் இருந்து கோலாப்பூர் நோக்கி தனியார் சொகுசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ் நேற்று காலை சத்தாரா மாவட்டம் அம்பரஜ் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்சுக்காக பயணிகள் நின்று கொண்டிருந்தனர்.
பஸ் நிறுத்தத்தை நெருங்கிய போது, அந்த சொகுசு பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி பயணிகள் கூட்டத்தில் புகுந்தது.
இதில் பயணிகள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், அந்த பஸ் சாலையின் மத்தியில் உள்ள தடுப்பு கம்பிகள் மீது மோதி நின்றது.
2 பேர் சாவுதகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
காயம் அடைந்தவர்களில் ஒரு பெண் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அந்த பெண் பெயர் பாக்யரதி (வயது57) என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரும் தனது இருக்கையில் மயங்கி கிடந்தார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவரும் இறந்து விட்டதாக கூறினர். பலியான இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.