புழல் பகுதியில் வீடு, கடைகளில் திருடிய கொள்ளையர்கள் 2 பேர் கைது


புழல் பகுதியில் வீடு, கடைகளில் திருடிய கொள்ளையர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 Jan 2018 4:00 AM IST (Updated: 6 Jan 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

புழல் பகுதியில் வீடு, 2 செல்போன் கடைகளில் திருடிய கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் காவாங்கரை கன்னடபாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். கடந்த மாதம் 28-ந் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு எல்.இ.டி. டி.வி.யை திருடிச்சென்று விட்டனர்.

அதே நாளில் புழல் காவாங்கரை கண்ணப்பசாமி நகரில் உள்ள 2 செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து 30-க்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரமும் திருட்டு போனது.

இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க புழல் உதவி கமிஷனர் பிரபாகர் மேற்பார்வையில் சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

வாகன சோதனை

இந்த தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு புழல் கேம்ப் அம்பத்தூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது புழலில் இருந்து அம்பத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களை போலீசார் நிறுத்தும்படி சைகை காட்டினர்.

ஆனால் அவர்கள், நிற்காமல் வேகமாக சென்றனர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், சிறிது தூரம் விரட்டிச்சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தார்.

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 3-வது தெருவைச் சேர்ந்த மணி என்ற மணிகண்டன்(வயது 27), சென்னை கொடுங்கையூர் 5-வது தெருவைச் சேர்ந்த தேவராஜ் என்ற கத்திக்குத்து தேவராஜ்(28) என்பதும், இவர்கள் 2 பேரும் சேர்ந்துதான் புழல் பகுதியில் வீடு மற்றும் 2 செல்போன் கடைகளில் திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து மணி, தேவராஜ் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 பவுன் தங்க நகைகள், ஒரு எல்.இ.டி. டி.வி., 27 செல்போன்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைதான 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த புழல் போலீசார், 2 பேரையும் திருவெற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 2 பேர் மீதும் மாதவரம், மாதவரம் பால்பண்ணை, மணலி, பொன்னேரி, சோழவரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இருவரும் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story