கடலில் மீன்பிடித்த போது குமரி-நெல்லை மீனவர்கள் இடையே திடீர் தகராறு அதிகாரிகளிடம் புகார்


கடலில் மீன்பிடித்த போது குமரி-நெல்லை மீனவர்கள் இடையே திடீர் தகராறு அதிகாரிகளிடம் புகார்
x
தினத்தந்தி 6 Jan 2018 3:52 AM IST (Updated: 6 Jan 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

கடலில் மீன்பிடித்த போது, குமரி-நெல்லை மீனவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டது.

கன்னியாகுமரி, 

கன்னியாகுமரியை சேர்ந்த 20 மீனவர்கள் 2 விசைப்படகுகள் மூலம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்றுமுன்தினம் அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்த மீனவர்கள் இரவு 9 மணிக்குள் கரை திரும்பவேண்டும் என்ற உத்தரவு உள்ளதால் இவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லமுடியாது. இதனால் கன்னியாகுமரியில் இருந்து 10 நாட்டிக்கல் தொலைவில் நெல்லை மாவட்டம் இடிந்தகரை - கூத்தங்குழி கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வள்ளங்களில் ஏராளமான மீனவர்கள் அங்கு வந்து கன்னியாகுமரி மீனவர்களின் விசைப்படகுகளை சுற்றிவளைத்தனர்.

விரட்டியடிப்பு

தொடர்ந்து, “எங்கள் பகுதியில் நீங்கள் எப்படி மீன்பிடிக்கலாம். எங்கள் வலைகள் சேதமடைந்து விட்டன” என்று கூறி குமரி மீனவர்களுடன் அவர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.

அதன்பிறகு குமரி மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை அவர்கள் பறித்துக்கொண்டு விரட்டியடித்தனர்.

சின்னமுட்டத்திற்கு திரும்பிய அந்த மீனவர்கள் இதுபற்றி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

சமரச பேச்சுவார்த்தை

இதைதொடர்ந்து சின்னமுட்டம் மீன்வளத்துறை அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை மீன்வளத்துறை துணை இயக்குனர் ராம ஜெயக்குமார் தலைமையில் சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் தீபா முன்னிலையில் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மீனவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, விசைப்படகு மீனவர்கள் கரையோர பகுதியில் மீன்பிடிக்க கூடாது எனவும், நாட்டுப்படகு வலைகளை சேதப்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்களின் விசைப்படகு சங்கத்தை சேர்ந்த மீனவர்கள் மட்டும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மற்ற சங்கங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் வழக்கம்போல கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

கடலில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கன்னியாகுமரி, நெல்லை கடலோர கிராமங்களில் பரபரப்பு நிலவியது. 

Next Story