சிரியா கிளர்ச்சிக்கும் வெப்பநிலை மாற்றத்துக்கும் உள்ள தொடர்பு


சிரியா கிளர்ச்சிக்கும் வெப்பநிலை மாற்றத்துக்கும் உள்ள தொடர்பு
x
தினத்தந்தி 6 Jan 2018 1:45 PM IST (Updated: 6 Jan 2018 12:22 PM IST)
t-max-icont-min-icon

ஐரோப்பாவில் குவியும் அகதிகளின் எண்ணிக்கைக்கும், உலகெங்கும் உள்ள விவசாயப் பகுதிகளில் வெப்பநிலை உயர்வதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது.

உலகெங்கும் உள்ள 103 நாடுகளில் உள்ள விவசாயப் பகுதிகளில் வெப்பநிலை 20 டிகிரியிலிருந்து மாறுபடும்போது, அந்த நாடுகளைச் சேர்ந்த அதிக அளவிலான மக்கள் வேறு நாடுகளில் புகலிடம் தேடுகிறார்கள் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதே அளவில் வெப்பநிலை உயர்ந்தால், இந்தப் பகுதிகளில் இருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6 லட்சத்து 60 ஆயிரம் என்ற அளவுக்கு உயரும்.

இந்த ஆய்வு முடிவு ‘சயின்ஸ்’ என்ற அறிவியல் இதழில் வெளியாகி உள்ளது.

2000- 2014-க்கு இடையிலான காலகட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் தேடுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் என்ற அளவில் இருந்திருக் கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இந்த ஆய்வில், வெப்பநிலை மாற்றத்தையும், அதனால் மக்கள் வேறு இடங்களில் குடிபெயர்வதையும் ‘வானிலை அதிர்வுகள்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

மனித நடத்தையில் இந்த வெப்பநிலை தாக்கத்தை ஏற் படுத்துகிறது என்ற ஆச்சரியத் தகவலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக அதிகமான வெப்பமும் குறைந்த மகசூலும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியைக் குறைக்கிறது, ஆவேசமான நடத்தைக்குக் காரணமாகிறது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

குறிப்பிட்ட ஆய்வின் தலைவரும் கொலம்பியா பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான உல்பிரம், “கடந்த 2000- 2014-க்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவில் தஞ்சம் அளிக்கக் கோரியவர்களின் எண்ணிக்கைக்கும், பருவ நிலைக்கு நேரடித் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தோம். குறிப்பிட்ட 103 நாடுகளில், சில நாடுகளின் பருவநிலை அதிர்ச்சியூட்டும் அளவுக்கு வெப்பமானதாகவும், சிலவற்றின் பருவநிலை அதிர்ச்சியூட்டும் அளவு குளிர்ச்சியானதாகவும் இருந்தது” என்கிறார்.

பூமியின் வெப்பநிலை பருவநிலைக் காரணங்களால் உயர்வது, தொழில்மயத்துக்கு முந்தைய அளவைக் காட்டிலும் 1.8 டிகிரி உயர்ந்தால், ஆண்டுக்கு 28 சதவீதம் என்ற அளவில் ஐரோப்பாவில் தஞ்சமடையக் கோருபவர்களின் எண்ணிக்கை உயரும். ஆனால், கார்பன் வெளியேற்றம் இப்போது உள்ள அளவில் தொடர்ந்து, வெப்பநிலை 4.8 டிகிரி என்ற அளவுக்கு உயர்ந்தால் தஞ்சமடைய விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 188 சதவீதம் தொடர்ந்து உயரும். அதாவது, ஆண்டுக்கு 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் புகலிடம் கோருவார்கள்.

உயரும் வெப்பத்தினால் ஐரோப்பாவில் புகலிடம் தேடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்ற கணக்கு விகிதத்தில் பேராசிரியர் உல்பிரம் உறுதியாக இல்லை.

இதற்கு அவர் சொல்லும் காரணம், நாம் இந்த வெப்ப நிலைக்கு பழகிக்கொள்ளத் தொடங்கலாம் என்பதுதான். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் பருவநிலை அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தால், நிலைமை மோசமாகும் என்கிறார் அவர்.

2015-ம் ஆண்டு செய்யப்பட்ட ஓர் ஆய்வு, சிரியா நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சிக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் உள்ள தொடர்பை வெளிக்கொணர்ந்தது. பருவநிலை மாற்றம் சிரியாவை மோசமான வறட்சியில் தள்ளியது. 2011-ம் ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சிக்கு அது ஒரு முக்கியக் காரணம் என்கிறது அந்த ஆய்வு.

குறிப்பிட்ட ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள், வெப்ப நிலைக்கும் புகலிடம் தேடுபவர்களுக்கும் உள்ள தொடர்பை விவரிக்கும் இந்த புதிய ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்கள்.

இயற்கையைச் சீரழித்து பருவநிலை மாற்றத்துக்குக் காரணமாவோர், இந்த விஷயங்கள் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டும்!

Next Story