கம்பத்தில் பயணிகள் கூட்டத்தில் பஸ் புகுந்து பெண் பலி 9 பேர் படுகாயம்
கம்பத்தில் பயணிகள் கூட்டத்தில் பஸ் புகுந்து பெண் பலியானார். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
கம்பம்,
கம்பம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வண்டிப்பெரியாருக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நேற்று மாலை 4.40 மணியளவில் வழக்கம் போல் கம்பத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இந்த பஸ்சை குமுளி அருகேயுள்ள அட்டப்பள்ளத்தை சேர்ந்த அஜி ராஜேந்திரன் (வயது 43) என்பவர் ஓட்டியுள்ளார்.
இந்த பஸ் கம்பம் பழைய பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ்சுக்காக காத்து நின்ற பயணிகள் கூட்டத்துக்கு புகுந்தது. பின்னர் அருகில் இருந்த ஓட்டலுக்குள் சென்று நின்றது.
இந்த விபத்தில் கருநாக்கமுத்தன்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவம் மனைவி மாரியம்மாள் (50) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அதேபகுதியை சேர்ந்த கமலா (55), முருகேஸ்வரி (35), பொட்டியம்மாள் (50), கருப்பாயி (65), கம்பத்தை சேர்ந்த உதயராஜா (30), உமாநாத் (45), தமிழ்செல்வி (32), ராஜபாளையத்தை சேர்ந்த பாண்டி (17) மற்றும் பஸ் டிரைவர் அஜி ராஜேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த அனைவரும் கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் பாண்டி, உமாநாத், கருப்பாயி, முருகேஸ்வரி, பொட்டியம்மாள், உதயராஜா ஆகிய 6 பேர் மேல்சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கேரள அரசு பஸ் டிரைவர் அஜி ராஜேந்திரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் தான் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலர் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. இதனால் விபத்து நடந்த இடத்துக்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்தனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகளும் வரவழைக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் ஏராளமான போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.