மாவட்டம் முழுவதும் 51 சதவீதம் அரசு பஸ்கள் ஓடின தற்காலிக டிரைவர்கள் நியமனம்


மாவட்டம் முழுவதும் 51 சதவீதம் அரசு பஸ்கள் ஓடின தற்காலிக டிரைவர்கள் நியமனம்
x
தினத்தந்தி 7 Jan 2018 4:00 AM IST (Updated: 7 Jan 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் தற்காலிக டிரைவர்கள் நியமிக்கப்பட்டதால் சுமார் 51 சதவீதம் பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.

தேனி,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நேற்றும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் சுமார் 20 சதவீதம் அரசு பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நேற்றும் காலை நேரத்தில் பஸ் போக்குவரத்து போதிய அளவில் இயக்கப்படவில்லை. குறிப்பாக கிராமப்புற பகுதிகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் காலை நேரத்தில் குறைந்த எண்ணிக்கையில் பஸ்களே இயக்கப்பட்டன. பின்னர், தற்காலிக டிரைவர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

மாவட்டம் முழுவதும் உள்ள 7 அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து தினமும் சுமார் 390 பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். நேற்று சுமார் 51 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. பிற்பகல் வரை சுமார் 200 பஸ்கள் இயக்கப்பட்டன. 100–க்கும் மேற்பட்ட தற்காலிக டிரைவர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

தனியார் பஸ்கள் நேற்று முன்தினம் போல் அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

அதேநேரத்தில் தேனியில் இருந்து கேரள மாநிலம் மூணாறுக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், மூணாறு செல்ல இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த பலர் தேனி புதிய பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர். அதேபோல், செங்கோட்டை, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கும் போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை நேற்றும் பாதிக்கப்பட்டது.


Next Story