பள்ளி மாணவர்களுடன் கல்வி சுற்றுலா சென்ற கலெக்டர்


பள்ளி மாணவர்களுடன் கல்வி சுற்றுலா சென்ற கலெக்டர்
x
தினத்தந்தி 7 Jan 2018 3:00 AM IST (Updated: 7 Jan 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

வல்லநாடு பகுதியில் கலெக்டர் வெங்கடேஷ் பள்ளி மாணவர்களுடன் கல்வி சுற்றுலா சென்றார்.

தூத்துக்குடி,

வல்லநாடு பகுதியில் கலெக்டர் வெங்கடேஷ் பள்ளி மாணவர்களுடன் கல்வி சுற்றுலா சென்றார்.

கல்வி சுற்றுலா

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வளர்க்கின்ற விதத்தில் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி, கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடந்து வருகிறது. கடந்த 4-ந்தேதி நடந்த இந்த நிகழ்ச்சியின்போது, மாவட்ட கலெக்டரிடம் பள்ளி மாணவர்கள், கல்வி சுற்றுலா சென்றுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று, மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில், பள்ளி மாணவர்கள் மரம் வளர்ப்பு, நாற்றங்கால் அமைத்தல், மூலிகைச் செடிகளின் பயன்பாடுகள், விஷ ஜந்துக்களிடம் இருந்து பாதுகாப்பாக இருத்தல், முதலுதவி நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் வனஉயிரின கணக்கெடுப்பு குறித்து அறிந்து கொள்ளும் வகையில், ஸ்ரீவைகுண்டம் வனச்சரகர் நெல்லைநாயகம் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

200 மாணவ- மாணவிகள்

அதன்படி நேற்று காலையில் வல்லநாடு வெளிமான் சரணாலய பகுதியில், மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 200 மாணவ-மாணவிகளுடன் கல்வி சுற்றுலா சென்றார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு மூலிகைச்செடிகளின் பயன்பாடுகள், விஷ ஜந்துக்களிடம் இருந்து பாதுகாப்பாக இருத்தல், மரம் வளர்ப்பு, மலை ஏற்றம், உடலில் அலர்ஜி ஏற்படும்போது, அவற்றில் இருந்து நிவாரணம் பெற அரியவகை மூலிகைகளின் மருத்துவ குணங்கள் குறித்து தெளிவாக எடுத்து கூறப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில், இதுபோன்ற கல்வி சுற்றுலா தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மாணவர்கள் கூறினர்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர்கள் (பயிற்சி) சரவணன், லாவண்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சங்கரய்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story