கோவில்பட்டியில் ரே‌ஷன் கடை ஊழியர்கள் திடீர் சாலைமறியல்


கோவில்பட்டியில் ரே‌ஷன் கடை ஊழியர்கள் திடீர் சாலைமறியல்
x
தினத்தந்தி 7 Jan 2018 2:30 AM IST (Updated: 7 Jan 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ரே‌ஷன் கடை ஊழியர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் ரே‌ஷன் கடை ஊழியர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சாலைமறியல்

கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள ரே‌ஷன் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் வகையில், அவற்றை பொட்டலமிடும் பணி கோவில்பட்டி வேலாயுதபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனை சங்கத்தில் நேற்று நடந்தது. இந்த பணியில் அந்தந்த ரே‌ஷன்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள், எடையாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் அருளரசு அங்கு ஆய்வு செய்தார். அப்போது சில ஏலக்காய் பாக்கெட்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட 5 கிராமை விட எடை குறைவாக இருந்தது. இதுதொடர்பாக மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் அருளரசு, ரே‌ஷன் கடை ஊழியர்களை ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ரே‌ஷன் கடை ஊழியர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பொட்டலமிடும் பணியை நிறுத்தி விட்டு, காலை 11 மணியளவில் வேலாயுதபுரம் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தர்மலிங்கம், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ரே‌ஷன் கடை ஊழியர்கள் சாலைமறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ரே‌ஷன் கடை ஊழியர்கள், வேலாயுதபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனை சங்க அலுவலக நுழைவுவாயிலை பூட்டி, அதன் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் அருளரசு தனது காரில் வெளியே செல்ல முடியவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ரே‌ஷன் கடை ஊழியர்களிடம் மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர் சண்முகம், சார்பதிவாளர்கள் அழகுராஜன், முருகவேல், ராமசுப்பு, கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குனர் செல்வகோகிலா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து மதியம் 3 மணியளவில் ரே‌ஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story