போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை அரசு தீர்க்க வேண்டும் தூத்துக்குடியில் டி.டி.வி.தினகரன் பேட்டி
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை அரசு தீர்க்க வேண்டும் என்று தூத்துக்குடியில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
தூத்துக்குடி,
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை அரசு தீர்க்க வேண்டும் என்று தூத்துக்குடியில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
பேட்டிசென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடிக்கு வந்தார். நேற்று மாலை கோரம்பள்ளம் அருகே உள்ள ஒரு ரிசார்ட்டில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;–
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 3–வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் பிரச்சினைகளை அரசு தீர்க்க வேண்டும். மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் அரசு உரிய முறையில் போக்குவரத்து தொழிலாளர்களை அழைத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவை வைத்து கொண்டு அவர்களை புறக்கணிக்கக்கூடாது. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இதனை செய்யாமல் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேரவை கூட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்து இருந்தால் இந்த பிரச்சினையை எப்படி கையாண்டு இருப்பார் என்று எல்லோருக்கும் தெரியும். முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் இல்லை. அவர்கள் காலத்தின் சூழ்நிலையால் பதவியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.
ரஜினிகாந்த்இதுவரை மக்கள், கமல்ஹாசனை நல்ல நடிகர், நல்ல சிந்தனையார் என்று நினைத்து இருந்தனர். ஆனால் அவர் எந்த அளவிற்கு குதர்க்கமான சிந்தனை உள்ளவர் என்று இப்போது தெரியவந்து உள்ளது. அரசியலுக்கு வருவதாக அறிந்த 3 மாதங்களில் அவரின் உண்மை சுபாவம் வெளிப்பட்டு உள்ளது. பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் பதிவிடும் அவர், தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு இருக்க வேண்டும். அவர் யாரோ சொன்னதை வைத்து மக்களை இழிவாக பேசி வருகிறார். இதன்மூலம் தமிழக அரசு கமல்ஹாசன் யார் என்பதை அறிந்து கொண்டுள்ளது.
வேதா இல்லத்தை அரசு எடுத்துக்கொள்வதில் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்து உள்ளார். அவரை நான் வரவேற்கிறேன். இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் வெற்றி தோல்வியை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, ஜெயலலிதாவிற்கு தெரியாமல் யார், யார் வைத்து இருந்த பணம் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்று உள்ளது.
முக்கிய பிரச்சினைகள்8–ந்தேதி (நாளை) நான் சட்டமன்றம் செல்கிறேன். ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகிய நான் தொகுதி மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுப்பேன். அதேபோல் தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளான விவசாயிகள் பிரச்சினை, கூடங்குளம் அணுஉலை பிரச்சினை, நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுப்பேன்.
ஜெயலலிதா இறந்து ஒரு ஆண்டு முடிவடைந்த நிலையில் இன்னும் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படவில்லை. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவை ஞாபகம் வைத்து இருக்கிறாரா என்று தெரியவில்லை. ஜெயலலிதாவிற்கு மகள் இருக்கிறார் என்று கூறும்போதும், வேதா இல்லத்தில் சோதனை நடந்தபோதும் அவர்கள் அமைதியாக இருந்தனர். முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் துரோகத்தின் உச்சகட்டம். துரோகத்திற்கு வரும் காலத்தில் நாணயம் உருவாக்கப்படும் என்றால், ஒரு பக்கத்தில் முதல்–அமைச்சர் பழனிசாமி படமும், மறுபக்கத்தில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் படமும் இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது சசிகலா புஷ்பா எம்.பி., தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்செல்வன், சுந்தர்ராஜ், உமாமகேசுவரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.