கோத்தகிரியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஓட்டல் தொழிலாளி பலி


கோத்தகிரியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஓட்டல் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 7 Jan 2018 3:30 AM IST (Updated: 7 Jan 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஓட்டல் தொழிலாளி பலியானார். அவர் நேபாளத்தை சேர்ந்தவர் ஆவார்.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள அட்டவளை கிராமம் பீல்டு எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் மான்சிங்கவுத். இவருடைய மகன் லட்சுமண்சிங் சவுத் (வயது 25). நேபாள நாட்டைச் சேர்ந்த இவர் கோத்தகிரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வேலை முடிந்து லட்சுமண்சிங் சவுத் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

வீட்டிற்கு செல்லும் போது ராம்சந்த் சதுக்கத்தில் அந்த வழியாக வந்த நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் அவர் ஏற முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார். பின்னர் இது குறித்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. அங்கு இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்சில் மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து போனதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த அவருடைய மனைவி புனிதா ஆஸ்பத்திரிக்கு வந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. பின்னர் அவர் கோத்தகிரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Related Tags :
Next Story