வேலூர் அருகே 3 அரசு பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு


வேலூர் அருகே 3 அரசு பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 7 Jan 2018 4:30 AM IST (Updated: 7 Jan 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே 3 அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கி கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக மோட்டார்சைக்கிளில் வந்து கல்வீசி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வேலூர்,

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வேலூரில் இருந்து வெளியூருக்குச் செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. பொதுமக்களின் சிரமத்தை போக்க அரசு தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் மூலம் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்தது. போராட்டத்தை மீறி அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் ஓசூரில் இருந்து வேலூருக்கு அரசு பஸ் ஒன்று வந்தது. அதேபோல் ஆம்பூரில் இருந்து வேலூருக்கு அரசு பஸ் ஒன்று வந்தது. 2 பஸ்களும் வேலூரை அடுத்த மேல்மொணவூர் அப்துல்லாபுரம் அருகே அடுத்தடுத்து வந்தன. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் 2 பேர் திடீரென 2 பஸ்களின் மீது கல்வீசி சென்றனர். இதில் அந்த பஸ்களின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து உடனடியாக டிரைவர்கள் பஸ்களை சாலையோரமாக நிறுத்தினர். பயணிகள் அலறியடித்து பஸ்களில் இருந்து கீழே இறங்கினார்கள்.

இதேபோல் நேற்று மாலை 6 மணியளவில் ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. வேலூர் சேண்பாக்கம் அருகே வந்த போது மர்ம நபர்கள் யாரோ பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பஸ் மீது கல்வீசி தாக்கியவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story