கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:–
கடந்த காலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எவ்வித நிபந்தனையும் இன்றி ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர் களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படி வழங்குவதோடு, குறைந்தபட்ச ஓய்வூதியத்தொகையாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், தொழிற் கல்வி ஆசிரியர்கள், பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய அரசு முன்வர வேண்டும்.
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் உச்சவரமின்றி ஒரு மாத ஊதியத்தை போனசாக வழங்க வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், ஊர்புற நூலகர், பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.