மூடப்பட்ட தொழிற்சாலை வளாகத்தில் மின் விளக்குகளை அகற்றியதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


மூடப்பட்ட தொழிற்சாலை வளாகத்தில் மின் விளக்குகளை அகற்றியதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2018 3:45 AM IST (Updated: 7 Jan 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் மூடப்பட்ட தொழிற்சாலை வளாகத்தில் பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்ட மின் விளக்குகளை அகற்றியதை கண்டித்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர், 

திருவொற்றியூர் மேற்கு பகுதியில் உள்ள ராஜாஜி நகர், கார்க்கில் நகர் உள்ளிட்ட 15 கிராம மக்கள் மாட்டுமந்தை மேம்பாலம் வழியாக திருவொற்றியூருக்கு வரும்போது மூடிக்கிடக்கும் கிளாஸ்பேக்டரி தொழிற்சாலை வளாகத்துக்குள் உள்ள சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். தற்போது அண்ணாமலைநகர் ரெயில்வே கேட் மூடப்பட்டு தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களிலும், நடந்தும் சென்று வருகின்றனர். ஆனால் தொழிற்சாலை வளாகத்துக்குள் அமைந்து உள்ள இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இங்கு மாநகராட்சி சார்பில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு இருந்தும், மின் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக வருபவர்கள், சாலையில் உள்ள பள்ளங்களில் தவறி விழும் நிலை ஏற்பட்டதுடன், திருட்டு பயமும் அடைந்தனர்.

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் சார்பில், தொழிற்சாலை வளாகத்துக்குள் உள்ள சாலையோரம் பழுதடைந்து கிடந்த மின் விளக்குகளுக்கு பதிலாக புதிதாக மின்விளக்குகள் அமைத்தனர். இதை அறிந்த மின்வாரிய அதிகாரிகள், போலீசாருடன் சென்று பொதுமக்கள் அமைத்த மின்விளக்குகளை கழற்றி அப்புறப்படுத்தினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் தி.மு.க. வட்ட செயலாளர் ஆதிகுருசாமி தலைமையில் மூடிக்கிடக்கும் தொழிற்சாலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் மீண்டும் மின் விளக்குகள் அமைத்து தரும்படி வலியுறுத்தினர். பின்னர் இது தொடர்பாக சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

Next Story