வாலிபரை கொடூரமாக தாக்கிய வழக்கில் கேரளாவை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது


வாலிபரை கொடூரமாக தாக்கிய வழக்கில் கேரளாவை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jan 2018 3:00 AM IST (Updated: 7 Jan 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் வாலிபரை கொடூரமாக தாக்கிய வழக்கில் கேரளாவை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மங்களூரு,

மங்களூருவில் வாலிபரை கொடூரமாக தாக்கிய வழக்கில் கேரளாவை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பா.ஜனதா தொண்டர் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

வாலிபர் மீது தாக்குதல்

மங்களூரு போலீஸ் கமிஷனர் டி.ஆர்.சுரேஷ் நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மங்களூருவில் கடந்த 3-ந்தேதி (புதன்கிழமை) மதியம் பா.ஜனதா தொண்டரான தீபக் ராவ் படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 4 கொலையாளிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து மங்களூரு மாநகரில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. இந்த சமயத்தில் மங்களூரு குத்ரோலி ஆகாஷ பவன் பகுதியை சேர்ந்த பசீர் (வயது 30) என்பவர் இரவு 11 மணி அளவில் கொட்டாரசவுக்கி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அவரை வழிமறித்து சரமாரியாக பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். பின்னர் 6 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பசீர் கவலைக்கிடமான நிலையில் மங்களூரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதில் தொடர்புடைய மர்மநபர்களை பிடிக்க மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேலன்டைன் டிசோசா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

4 பேர் கைது

இதற்கிடையே பசீர் தாக்குதல் தொடர்பான காட்சிகள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் நேற்று (நேற்று முன்தினம்) கன்னட செய்தி தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. இதனால் மங்களூரு மாநகரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்களில் வீடியோ காட்சிகளை வெளியிடும் முன்பு ஊடகத்தினர் யோசித்து செயல்பட வேண்டுகோள் வைக்கிறேன்.

இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், கைதானவர்கள் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் உப்பளா பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் (25), மங்களூரு படில் பகுதியை சேர்ந்த கிஷன் பூஜாரி (21), தனுஷ் பூஜாரி (22), காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரர் பகுதியை சேர்ந்த சந்தேஷ் கோட்டியான் (22) ஆகியோர் என்பதும், இவர்கள் 4 பேரும் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது.

பழிக்குப்பழியாக...

காசர்கோட்டை சேர்ந்த ஸ்ரீஜித், சந்தேஷ் கோட்டியான் ஆகியோர் மங்களூரு பம்புவெல் பகுதியில் உள்ள கரடி கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்துள்ளனர். அந்த சமயத்தில் பா.ஜனதா தொண்டர் தீபக் ராவ் கொலையானதை அறிந்து கோபம் அடைந்துள்ளனர். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக ஒரு குறிப்பிட சமூகத்தை சேர்ந்த யாரையாவது தாக்க வேண்டும் என்று மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்டு சென்றுள்ளனர். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த பசீரை வழிமறித்து அவர்கள் தாக்கியுள்ளனர்.

விசாரணையின் போது கைதான 4 பேரும் பல்வேறு தகவல்களை போலீசாரிடம் தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஆனால் அது உண்மையா? இல்லையா? என்பது தெரியவில்லை. விசாரணை முடிவில் தான் தெரியவரும். முன்விரோதத்தில் இந்த சம்பவம் நடக்கவில்லை. தீபக் ராவ் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த தாக்குதல் நடந்துள்ளது.

மேலும் சிலருக்கு வலைவீச்சு

கைதானவர்களில் ஸ்ரீஜித் மீது காசர்கோடு, உல்லால் போலீஸ் நிலையங்களில் மொத்தம் 7 வழக்குகளும், கிஷன் பூஜாரி மீது 3 வழக்குகளும், தனுஷ் பூஜாரி மீது 2 வழக்குகளும், சந்தேஷ் கோட்டியான் மீது காசர்கோடு மாவட்டம் பதியடுக்கா போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் சிலரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது துணை போலீஸ் கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) அனுமந்தராயா, துணை போலீஸ் கமிஷனர் (போக்குவரத்து) உமா பிரசாந்த் உடன் இருந்தார்.

Next Story