சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சமத்துவ பொங்கல் விழா அன்புமணி ராமதாஸ் எம்.பி. பங்கேற்பு
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார்.
சென்னை,
கோயம்பேடு வணிக வளாக கீரை மொத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பாரம்பரிய உடை அணிந்து பெண்கள் பங்கேற்றனர். 120-க்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையாக அமர்ந்து விறகு அடுப்புகளில் மண் பானையை வைத்து பொங்கல் வைத்தனர்.
இதேபோல வரிசையாக கரும்புகளும் நட்டு வைக்கப்பட்டிருந்தன. இந்த விழாவில் பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார். அப்போது அவருடன் துணை பொதுச்செயலாளர்கள் ஏ.கே.மூர்த்தி, கே.என்.சேகர், சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன், வேளச்சேரி தொகுதி செயலாளர் அடையாறு வி.வடிவேல் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள்...
இதையடுத்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட்டில் பாட்டாளிகளுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சுகாதாரம் இல்லாத நிலையில் இங்கு ஆயிரம் வியாபாரிகள் தொழில் செய்கின்றனர். சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பெரிய போராட்டத்தை நடத்தியும், எந்த பலனும் இல்லை. போக்குவரத்து தொழிலாளர்களின் நியமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதனை நிறைவேற்றி கொடுக்க அரசு தவறிவிட்டது.
போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதற்கு தி.மு.க., அ.தி.மு.க.வின் ஊழல் தான் காரணம். இதனால் ஏழை மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். அரசு கவுரவத்தை பார்க்காமல் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் சிறப்பாக இயங்குவது நீதித்துறை மட்டும் தான். ஊழல் செய்வதையே நோக்கமாக கொண்டு அதிகாரிகள் அலுவலகத்திற்கு செல்கின்றனர்.
தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும்
ஒகி புயலில் பாதிப்புக்குள்ளான மீனவர்கள் பற்றி அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை. மேலும் ஒகி புயலில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்பதிலும் அரசு முனைப்பு காட்டவில்லை. கடிதம் எழுதுவது மட்டும் தான் தன்னுடைய கடமை என அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் தமிழகம் முன்னேற்றப்பட வேண்டும் என்பதை விடவும், காப்பாற்றப்பட வேண்டும் என்பதே முக்கியமானதாக உள்ளது.
மத்திய மந்திரி மேனகா காந்தியை சமீபத்தில் நான் ஒரு விவகாரம் சம்பந்தமாக சந்தித்தேன். அப்போது தமிழக மக்களிடம் எதுவுமே இல்லையா? என கேட்டது அசிங்கமாக இருக்கிறது. 206 பக்கங்கள் கொண்ட அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலுக்கு ஒரு மாத கால அவகாசம் கவர்னர் கேட்டுள்ளார். அதற்கான கால அவகாசம் இன்னும் முடியவில்லை. அதன் பின்னர் நாங்கள் எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்துவோம். கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் ஜல்லிக்கட்டு சென்று விட்டது என்பது தவறான தகவல்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story