நகை, பணம் கிடைக்காததால் ஆவணங்களை எடுத்துச்சென்ற திருடன்
சென்னை பொதுப் பணித்துறை அதிகாரி வீட்டில் புகுந்த திருடன் நகை, பணம் கிடைக்காததால் சில ஆவணங்களை எடுத்துச்சென்றான்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த காக்களூர் எம்பயர் சிட்டி 2-வது பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கண் காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரெஜினா(38) ஆசிரியர் பயிற்சி பெற்று வருகிறார்.
செந்தில்குமார் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி ரெஜினா, வீட்டை பூட்டிவிட்டு பட்டாபிராமில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இரவில் 2 பேரும் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஆவணங்கள் மாயம்
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் அறை முழுவதும் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த மோட்டார்சைக்கிள் ஆர்.சி. புத்தகமும், வீட்டுக் கடன் தொடர்பான ஆவணங் களும் திருடப்பட்டிருந்தது.
நகை, பணம் எதுவும் திருட்டுபோகவில்லை. 5 பவுன் நகையையும், ரூ.20 ஆயிரத்தையும் அவர்கள் வீட்டின் வேறு ஒரு அறையில் வைத்திருந்ததால் அவை திருட்டு போகாமல் தப்பியது. வீட்டின் வரவேற்பறையில் இருந்த டி.வி.யில் ஒரு கடிதம் மாட்டப்பட்டு இருந்தது.
‘ரூ.50 ஆயிரத்துடன் வா’
திருடன் எழுதியிருந்த அந்த கடிதத்தில், ‘நான் எடுத்துக்கொண்டுபோன பொருட்கள் (ஆவணங்கள்) வேண்டுமானால் 14-1-2018 அன்று திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சந்திக்க வேண்டும். சர்ச்சுக்கு போவதுபோல் ஒயிட் அண்டு ஒயிட் ஆடை அணிந்து வரவேண்டும். நான் கொண்டுபோன பொருள் வேண்டுமானால் ரூ.50 ஆயிரம் கொண்டுவர வேண்டும். மாலை 5 மணிக்கே கோவில் உள்ளே அமர்ந்திரு, உன் போன் எண்ணை படிகள் மீது எழுதிவை’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
செந்தில்குமார் இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story