வண்டலூர் பூங்காவில் விலங்குகள் தத்தெடுப்பு குறைந்து வருகிறது பொதுமக்கள் குற்றச்சாட்டு


வண்டலூர் பூங்காவில் விலங்குகள் தத்தெடுப்பு குறைந்து வருகிறது பொதுமக்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Jan 2018 4:30 AM IST (Updated: 7 Jan 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகள் தத்தெடுப்பு முறை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது.

வண்டலூர், 

வண்டலூர் உயிரியல் பூங்கா ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். இயற்கையோடு 602 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் 2,378 விலங்குகள் மற்றும் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வனங்கள் ஆகியவை பராமரிக்கப்படுகிறது.

பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்கும் திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. விலங்குகள் தத்தெடுப்பு மூலம் பொதுமக்கள் பூங்கா நிர்வாகத்தில் நேரடியாக பங்குகொள்ள முடிவதுடன், விலங்கு இருப்பிடங்கள் பராமரிப்பு, உணவுகளை தயார் செய்தல், உணவுகளை விலங்குகளுக்கு வழங்குதல் போன்ற பணிகளை நேரடியாக செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் தங்கள் அன்பை விலங்குகளிடம் நேரடியாக வெளிப்படுத்துவதற்கும், விலங்குகளை பற்றிய தகவல்களை நேரடியாக தெரிந்துகொள்வதற்கும் இது வழிவகை செய்கிறது.

தத்தெடுப்பது குறைவு

இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை பூங்காவில் உள்ள விலங்குகளை பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும், ஓரளவுக்கு தத்தெடுத்து உள்ளனர்.

ஆனால் அதன் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக விலங்குகளை தத்தெடுப்பதில் பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் விலங்குகள் தத்தெடுப்பு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை

வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை தத்தெடுத்து வளர்க்கும் முறை பொதுமக்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் வண்டலூர் பூங்காவில் விலங்குகளை தத்தெடுப்பது குறைந்து உள்ளது.

பூங்காவில் உள்ள அதிகாரிகள், விலங்குகள் தத்தெடுக்கும் முறை பற்றி பூங்கா வளாகத்தில் அல்லது ஊடகம், வலைதளங்கள் மூலம் அடிக்கடி பொதுமக்களுக்கு போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தாததே இதற்கு முக்கிய காரணம்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் கடந்த 2017-ம் ஆண்டில் மொத்தம் 6 பேர் மட்டுமே விலங்குகளை தத்தெடுத்து உள்ளனர். எனவே வனத்துறை அதிகாரிகள் விலங்குகளை பற்றி அதிக அளவில் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த ஆண்டிலாவது விலங்குகளை தத்தெடுக்கும் ஆர்வத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வரி விலக்கு அளிக்கப்படும்

இந்த திட்டத்தை பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். விலங்குகளை தத்தெடுக்கும் நபர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

பொதுமக்கள் தங்களது பிறந்த நாள் அல்லது திருமண நாள், அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்த நாள்கள் வரும்போது தங்களுக்கு பிடித்த விலங்குகள், பறவைகள் ஆகியற்றை ஒரு நாளைக்கு கூட தத்தெடுக்கலாம். அல்லது ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருடத்துக்கு கூட தத்தெடுக்கும் முறையை பூங்கா நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story