திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு: புதுவை ரெயில் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு


திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு: புதுவை ரெயில் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
x
தினத்தந்தி 7 Jan 2018 3:45 AM IST (Updated: 7 Jan 2018 3:45 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி ரெயில் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றும்படி திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உத்தரவிட்டார்.

புதுச்சேரி,

தென்னக ரெயில்வேயில் திருச்சி கோட்டத்தில் முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக புதுச்சேரி இருந்து வருகிறது. இங்கிருந்து சென்னை, மங்களூரு, கன்னியாகுமாரி, மும்பை, டெல்லி, திருப்பதி, கொல்கத்தா, புவனேஸ்வர் உள்பட 17 நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது புதுவை ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு 4-வது நடைமேடை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறன.

இந்தநிலையில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதயகுமார் ரெட்டி நேற்று காலை புதுச்சேரி வந்தார். அவருடன் அதிகாரிகள் பலர் வந்தனர். புதுவை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், 4-வது நடைமேடை அமைக்கும் பணி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து ரெயில்வேக்கு சொந்தமான இடத்தை திட்டங்களுக்கு பயன்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

பின்னர் அவர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி ரெயில் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம். எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்புதான் முக்கியம். இந்த ரெயில் நிலையத்தில் நிறைய ஆக்கிரமிப்புகள் காணப்படுகின்றன. ரெயில்வே துறையின் சொத்துகளை மக்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இவற்றை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளேன். மேலும், ரெயில் நிலையத்தில் தேவையான மேம்பாட்டு பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story