சென்னை, கடலூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு புதுவையில் இருந்து பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் அவதி


சென்னை, கடலூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு புதுவையில் இருந்து பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 7 Jan 2018 3:51 AM IST (Updated: 7 Jan 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் இருந்து சென்னை, கடலூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு பஸ்கள் கிடைக்காமல் பொதுமக்கள் நேற்றும் அவதிக்குள்ளானார்கள்.

புதுச்சேரி,

தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. புதுச்சேரியில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து கழக பணி மனையில் இருந்து 100க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப் படுகின்றன. இவை எதுவும் ஓடாததால் சென்னை, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

ஒருசில தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் வழக்கத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இருந்தபோதிலும் வேறுவழியின்றி இந்த பஸ்களில் பயணிகள் பயணம் செய்தனர். இதனால் அந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னை, கடலூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு எந்த நேரமும் பஸ் ஓடிக் கொண்டு இருந்தநிலையில் தற்போது பஸ்கள் இல்லாமல் பொதுமக்கள், வேலைக்குச் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர்.

சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

வழக்கமாக வார இறுதி நாட்களில் புதுவைக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். ஆனால் தற்போது அரசு பஸ்கள் ஓடாததால் சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து புதுவைக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.

இதற்கிடையே புதுவை மாநில ஜெயலலிதா பேரவையின் முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஓம்சக்தி சேகர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணிக்கு திரும்ப விரும்பும் ஊழியர்களை சிலர் தடுக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. பஸ்சை இயக்க வரும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளித்து போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story