ஜல்லிக்கட்டு காளை... துள்ளி வரும் வேளை...


ஜல்லிக்கட்டு காளை... துள்ளி வரும் வேளை...
x
தினத்தந்தி 7 Jan 2018 12:00 PM IST (Updated: 7 Jan 2018 10:50 AM IST)
t-max-icont-min-icon

‘வாடிவாசல் திறக்கும் வரை வீடுவாசல் செல்ல மாட்டோம்’ இது கடந்த ஜனவரி மாத மத்தியில் மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் என லட்சக்கணக்கானவர்கள் ஜல்லிக் கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டத்தின் போது எழுப்பிய கோஷம்.

இந்த கோஷம் பலதரப்பட்டவர்களையும் தமிழர்கள் பக்கம் திரும்பச்செய்தது. அதன் பலனாக ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டது. வரலாற்றில் இடம்பெற்றுள்ள ஜல்லிக்கட்டு போராட்டம் தைப்புரட்சி, மெரினா புரட்சி, இளைஞர்கள் புரட்சி என்று ஊடகங்களாலும், சில அரசியல் கட்சி தலைவர்களாலும் பெருமையுடன் குறிப்பிடப்பட்டது.

அரசியல் கட்சி தலைமைகளின் முனைப்புகள் ஏதுமின்றி, குறிப்பிடத்தக்க தலைமை அடையாளங்கள் ஏதுமின்றி, தன்னிச்சையாகவே பொதுமக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக வலைத்தளங்களின் வழியாகவே பெருந்திரளான இளைஞர்களைத் திரட்டி அமைதி வழியில் போராட்டங்களை நடத்தினர்.

தமிழனின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கி, கடந்த ஆண்டு தாமதமாக ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இந்த ஆண்டு ‘பீட்டா’ அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டது. ஆனால் நீதிபதிகள் தடை விதிக்க மறுத்து விட்டனர்.

ஆக, ஜல்லிக்கட்டு தடையை உடைத்து எறிந்து ஓராண்டை நிறைவு செய்து இந்த ஆண்டு புதிய உத்வேகத்துடன் ஜல்லிக்கட்டை கொண்டாட தமிழக இளைஞர்கள் கடந்த சில மாதங்களாகவே தங்களை தயார் செய்து வருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு காளைகள், காளையர்கள் மீதான எதிர்பார்ப்பும், மரியாதையும் அதிகரித்து இருப்பதை காண முடிகிறது.

கடும் போராட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றியால் வழக்கத்தை விட ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதில் பலருக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு தை மாதம் நடக்க உள்ள ஜல்லிக்கட்டு விழாக்களுக்கு தங்கள் காளைகளை தயார் செய்து வருகின்றனர்.



மதுரை அவனியாபுரத்தில் தைப்பொங்கல் நாளிலும், அடுத்த நாள் பாலமேட்டிலும், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜனவரி 16-ந்தேதியும் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

வழக்கத்தை காட்டிலும் இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கூடுதலாக காளைகளும், அவற்றை அடக்க காளையர்களும் பங்கேற்க உள்ளனர்.

இன்னும் சில நாட்களே உள்ளதால் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் மதுரை மாவட்டத்தில் மும்முரமாக நடந்து வருகின்றன. ஒருபுறம் விழா ஏற்பாடுகள் நடக்க, மறுபுறம் காளைகளும், காளையர்களும் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர். தை மாதம் தொடங்கி தமிழகம் முழுவதும் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது.

திட்டமிட்டபடி நடக்கும்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தலைவர் நாட்டாமைசுந்தர்ராஜன், செயலாளர் சுந்தரராகவன் ஆகியோர் கூறியதாவது:-

மிகப்பெரிய போராட்டத்தின் விளைவாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் சட்டம் இயற்றப்பட்டு கடந்த ஆண்டு விழா நடந்தது. தற்போது 2-வது முறையாக வருகிற 16-ந்தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு சீரும் சிறப்புமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை நடத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் ஆர்வம் பலரிடையே ஏற்பட்டுள்ளது. இதனால் காளைகளை வாங்கி ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றனர். மாடுபிடி வீரர்களும் வழக்கத்தை காட்டிலும் அதிகரித்துள்ளனர். மாடுகளின் விலை பல மடங்கு அதிகரித்து உள்ளது. எனவே இந்த ஆண்டு கூடுதலாக மாடுகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் அத்தனை மாடுகளையும் விளையாட்டில் பங்கேற்கச் செய்வது என்பது இயலாதது.

400 ஆண்டு பழமையான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்றாலே காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தனி மரியாதை உண்டு. அந்த மவுசு கூடிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் என ஏராளமான விலை உயர்ந்த பரிசுகள் தயாராக உள்ளன. சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும் அலங்காநல்லூர் விழாவுக்கு இருக்கும் மவுசு குறையாது.

திட்டமிட்டபடி எங்கள் ஊரில் சிறப்பாக ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

காதலும், வீரமும்...


பூதக்குடியை சேர்ந்த காளை உரிமையாளர்கள் மணிமுத்து, விவேக் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டின் பழைய வடிவம் ஏறு தழுவல். காட்டில் ஆடு, மாடுகளைப் பழக்கி தமிழர்கள் வாழ்ந்த முல்லை நில நாகரிக காலத்தில் ஏற்பட்ட வழக்கம் இது. தொடக்கத்தில் காட்டு மாடுகளை போரிட்டு அடக்கி வழிக்கு கொண்டு வர வேண்டியிருந்தது. இந்த வினை பிறகு விளையாட்டாகிவிட்டது. இது தமிழர்களின் நாகரிக பண்பாட்டு அடையாளங்களின் ஒன்று. சிலர் பசுவை மட்டுமே மதிப்பார்கள். தமிழர்களோ காளையையும் சேர்த்தே மதிப்பார்கள். அதன் வெளிப்பாடே மாட்டுப் பொங்கல். வேளாண்மையில் தனக்கு உதவியாக இருந்த தோழனுக்கு நன்றி சொல்லி போற்ற பண்டிகையில் ஒரு நாள் தந்த பண்பாடு தமிழனுக்கு மட்டுமே உரியது. ஸ்பெயினிலும் காளைச் சண்டை உண்டு. ஆனால் அங்கே காளைகளைக் குத்திக் கொன்றுவிடுவார்கள்.



தமிழ்நாட்டில் காளைகளை அடக்குவார்களே தவிர, கொல்லமாட்டார்கள். சங்க காலத்தில் இதற்கு பெயர் ஏறு தழுவல். ஏற்றுச்சண்டை அல்ல. அதாவது காதலியை தழுவுவது போல் காளைகளின் கொம்புகளை தழுவுவது. சங்க காலத்தில் ஏறு தழுவலில் வெறும் வீரம் மட்டும் அல்ல; காதலும் சேர்ந்திருக்கிறது. அக்காலத்தில் காதலும் வீரமும்தான் வாழ்க்கையின் முக்கியமான அம்சங்கள். காதலுக்காக வீரம், வீரத்துக்காக காதல்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. வீரியமுள்ள காளைகளின் விலை பல லட்சம் என சந்தை நிலவரம் உள்ளது. இதனால் தமிழகத்தில் ஒவ்வொரு ஊரில் நடக்கும் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு விழாக்களில் மாடுகளுக்கு பஞ்சம் இருக்காது. மாடுபிடி வீரர்களும் அதிக அளவில் களத்தில் இறங்குவார்கள். அதற்கு ஏற்றாற்போல எங்கள் மாடுகளை தயார்படுத்தி வருகிறோம். தீவிரமாக பயிற்சி கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். அதே நேரத்தில் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியநிலை உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

‘சுலபமாக அடக்குவோம்’


கடந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக பரிசுகளை தட்டிச்சென்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற பண்ணைகுடியை சேர்ந்த விமல்ராஜ் கூறியதாவது:-

பல வருடங்களாக ஜல்லிக்கட்டில் மாடுகளை அடக்கி ஏராளமான பரிசுகளை வென்று இருக்கிறேன். ஆனால் இந்த வருடம் எங்கு பார்த்தாலும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதிலும், மாடுகளை பிடிப்பதற்கும் நிறைய பேர் தங்களை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு காளைகள் ஜல்லிக்கட்டில் அவிழ்த்துவிடப்பட்டாலும், எல்லா மாடுகளுமே ஒரு சில குணங்களை ஒட்டுமொத்தமாக கொண்டதாகவே இருக்கும். அதனால் என்னை போன்ற வீரர்கள் சுலபமாக மாடுகளை அடக்குவோம். என்னை தயார்படுத்திக்கொண்டு, விருப்பமுள்ளவர்களுக்கும் பயிற்சி கொடுத்து ஆலோசனைகளை கூறி வருகிறேன்.

சென்னையில் நடக்க உள்ள ஜல்லிக்கட்டிலும் நாங்கள் பங்கேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒத்துழைப்பு தருவோம்


ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி.ராஜசேகர் கூறியதாவது:-

சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இந்த விளையாட்டு நடக்க இருப்பதால் காளைகளுக்கும், வீரர்களுக்கும் பெரும் சேதங்கள் தவிர்க்கப்படும். இதனால் ஏராளமான இளைஞர்கள் மாடுகளை அடக்க தயாராகி வருகின்றனர். அதை விட காளைகளை வளர்ப்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன்காரணமாக சமீபத்தில் காளைகளுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. தோராயமாக ஒரு காளை அதிகபட்சம் ரூ.70 ஆயிரம் வரை தான் சந்தையில் விலை போனது. ஆனால் இப்போது அதே காளையை ரூ.4 லட்சம் விலை கொடுத்து வாங்கி பயிற்சி கொடுக்கிறார்கள்.

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தின் விளைவாக சென்னை ஜல்லிக்கட்டு பேரவை என்ற பெயரில் குழு ஏற்படுத்தப்பட்டு அங்கு இந்த விளையாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். எங்களையும் அந்த குழுவுடன் இணைத்துள்ளார்கள். அதேபோல கோவை மற்றும் சில ஊர்களிலும் புதிதாக ஜல்லிக்கட்டு நடத்த விருப்பப்பட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எத்தனை ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தினாலும் நாங்கள் அனைவருக்கும் ஆலோசனைகளையும், ஒத்துழைப்பையும் தருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஞ்சாத சிங்கம், இந்த அழகுநாச்சியின் காளை


ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை வீடுகளில் வளர்த்து வருகின்றனர். அலங்காநல்லூரை அடுத்த வெள்ளையம்பட்டியை சேர்ந்த விவசாயி நாகராஜனின் மனைவி அழகுநாச்சி (வயது 30). இவர் கடந்த 7 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். அந்த காளைக்கு நாகமலை என்று பெயரிட்டுள்ளார். செல்லமாக ‘நாகு’ என்று இவர் குரல் கேட்டால் போதும். பூனை போல பதுங்கி, பாசத்துடன் அழகுநாச்சியை பார்க்கிறது காளை.

சாதாரணமாக மாடு வளர்ப்பது போல ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க முடியாது என்று கூறும் அழகுநாச்சி தொடர்ந்து கூறியதாவது:-

என் கணவருக்கும், எனக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. நான் இந்த வீட்டுக்கு (கணவர் வீட்டுக்கு) வரும்போது சின்னஞ்சிறு கன்றுக்குட்டியாக நாகு இருந்தான். அப்போது இருந்து என்னுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினான். நானும், அவனும் இணைபிரியாத உடன்பிறவாத அக்காள்-தம்பியாக ஆகிவிட்டோம்.



இப்போது என் மாமனார், மாமியார், கணவர் என எல்லோரையும் விட என் மீது தான் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறான். குடும்பத்தினரை தவிர மற்றவர்களை பார்த்தாலே முட்டித்தள்ளி விடும் நோக்கத்தில் திமிலை நிமிர்த்தி பார்த்து மிரட்டுவான். ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூர், பாலமேடு, அம்மையநாயக்கனூர் என பெரும்பாலான ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு கொண்டு செல்வோம். எல்லா ஊர் ஜல்லிக்கட்டிலும் காளையர்களிடம் சிக்காமல் திமிறி வந்து பரிசுகளை அள்ளிவிடுவான்.

ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க ஆண்களே யோசிக்கும் நிலையில், உங்களால் எப்படி முடிகிறது?

சாதாரண மாடுகளை வளர்ப்பதிலும், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஏராளமான கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டும். குறிப்பாக தை மாதம் நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டுக்காக எங்கள் வீட்டில் ஒட்டு மொத்த நபர்களும் விரதம் இருந்து எங்கள் காளைக்கு பயிற்சி கொடுப்போம். ‘நாகு’ என்னுடைய பேச்சுக்கு அடங்கி இருந்தாலும், மண் குத்துவது, நீச்சல் போன்ற பயிற்சிகளுக்கு என் கணவரின் உதவியை நாட வேண்டியுள்ளது.

சில நேரங்களில் நாகு முரண்டு பிடிப்பான். அந்த சமயத்தில் அவனை வழிக்கு கொண்டு வர நான் கோபமாக இருப்பது போல நடந்து கொள்வேன். உடனடியாக என் முன்வந்து சமாதானப்படுத்தும் நோக்கத்தில் உரசி நெகிழச்செய்வான்.

எங்கள் வீட்டில் ஒருவனாக இருக்கும் நாகுவை பராமரிப்பது நான் மட்டும் தான். ஊரார் முன்பும், உற்றார் உறவினர்கள் முன்பும் எங்களை தலைநிமிரச் செய்யும் நாகுவை குடும்பத்தில் ஒருவனாக பாவித்து பராமரிக்கிறோம்.

சரியான நேரத்தில் முட்டை, முந்திரி, பாதாம், பிஸ்தா, நாட்டுக்கோழி சூப் சேர்த்து சத்தான சாப்பாடு எல்லாம் கொடுக்கணும். அப்ப தான் வாடிவாசலில் காளையர்களை பந்தாடுவான். கொஞ்சம் கவனக்குறைவாய் விட்டாலும் சிக்கல்தான்.

உங்கள் காளையை வளர்க்க ஆகும் செலவை எப்படி சமாளிக்கிறீர்கள்?

விவசாயத்தில் கிடைக்கும் குறைந்த வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வரும் நாங்கள், நாகுவுக்கு தனி கவனம் செலுத்துகிறோம். நம் வீட்டில் மற்றொரு மனித உறுப்பினர் இருந்தால் செய்யும் செலவு போலத் தான் எங்கள் காளைக்கு செலவழிப்பதை நினைக்கிறோம். லட்சம் ரூபாய்க்கு எங்கள் காளையை விலைக்கு கேட்டனர். அவனை விற்று நாங்கள் சொத்து சேர்த்து என்ன செய்யப்போகிறோம் என்று மறுத்துவிட்டோம்.

சொத்து சேர்ப்பது என்பது கனவு கிடையாது. நாகுவை பிராணியாக பார்க்காமல் உடன் பிறந்த சகோதரனாக பாவிக்கிறோம்.

பிராணிகளிடம் பழகிப் பாருங்கள். அவை மனிதர்களை விட விசுவாசம் நிறைந்தவை என்பதை புரிந்து கொள்வீர்கள்.

இவ்வாறு அழகுநாச்சி கூறினார்.

கடந்த 5 ஆண்டுகளாக அழகுநாச்சியின் காளையை காளையர்கள் யாரும் அடக்கமுடியவில்லை. தங்கம், வெள்ளி, சைக்கிள், அண்டா என பரிசுகளை அள்ளிவந்துள்ளது, இந்த காளை.

Next Story