சணல் பையில் பணம் கொட்டுது..


சணல் பையில் பணம் கொட்டுது..
x
தினத்தந்தி 7 Jan 2018 7:00 AM (Updated: 7 Jan 2018 5:35 AM)
t-max-icont-min-icon

சணல் பை தயாரித்து தான் பணம் சம்பாதிப்பதோடு, 16 பெண்களுக்கு வேலையும் வழங்கி வருகிறார், மினி தாமஸ். இவர் சிறுவயதில் இருந்தே அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் வழக்கம் கொண்டவர்.

அதனால் 12-ம் வகுப்பு படித்து முடித்ததும், ‘டிப்ளமோ இன் சோஷியல் ஒர்க்’ துறையில் சேர்ந்து படித்தார். அதன் பின்பு தனியார் நிறுவனம் ஒன்றில் பணி யாற்றியிருக்கிறார்.

“நான் செய்து வந்த வேலை மூலம் எனக்கு போதுமான அளவு சம்பளம் கிடைத்தது. ஆனால் மனஅழுத்தம் அதிகமாக இருந்தது. சம்பாதிக்கும் பணத்தைவிட நிம்மதி முக்கியம் என்பதை உணர்ந்ததால், அந்த வேலையில் இருந்துவிடுபட்டேன். எனக்கு தெரிந்த பெண்களில் நிறைய பேர் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுக்கவேண்டும் என்று விரும்பினேன். மற்றவர்களுக்கு வேலை கொடுக்கவேண்டும் என்றால் நான் ஏதாவது ஒரு பொருளை தயாரிக்க வேண்டும். அதனால், என்னால் எந்த பொருளை தயாரிக்க முடியும் என்று யோசித்தேன். நான் தயாரிக்கும் பொருள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும் என்றும் நினைத்தேன். பலவாறாக சிந்தித்து இறுதியில் சணல் பைகள் தயாரிக்கும் முடிவுக்கு வந்தோம். நானும் என் தோழி சரிதாவும் சேர்ந்து அதற்கான தொழிற்சாலை ஒன்றை சிறிய அளவில் தொடங்கினோம்” என்கிறார், மினி தாமஸ்.

சணல் பைகள் தயாரிக்கும் பணியை மினியும், அதனை விற்பனை செய்யும் பணியை சரிதாவும் செய்கிறார்கள். முதலில் சிறிய அளவில் தொடங்கி, 3 பெண்களுக்கு வேலைகொடுத்திருக்கிறார்கள். சணல், காட்டன், கேன்வாசில் கருத்தரங்குகளுக்கான பைகளை தயார் செய்திருக்கிறார்கள். இவர் கேரள மாநிலம் பாலக்காட்டின் எல்லையில் இருக்கும் கொழிஞ்சம்பாறையில் தனது யூனிட்டை நடத்துகிறார்.

“கருத்தரங்குகளுக்கு வருகிறவர்களுக்கு இலவசமாக கொடுக்கும் சணல் பைகளை தயாரிக்கும் வேலைதான் முதலில் எங்களுக்கு கிடைத்தது. பின்பு செமினார் பேக்குகளை தவிர்த்து லேடீஸ் வானிட்டி பேக், பர்ஸ், எக்ஸ்கியூட்டிவ் பேக்குகள் போன்றவைகள் தயாரிக்க ஆர்டர்கள் கிடைத்தன. போல்டர்கள், பைல்கள் தயாரிக்கவும் முயற்சி செய்தோம். அதுவும் வெற்றியை பெற்றுத்தந்துள்ளது. அரசு அமைப்புகளும், பல்வேறு சமூக அமைப்புகளும் எங்களுக்கு ஆர்டர்கள் தருகின்றன. அவர்களது பட்ஜெட்டுக்கு தக்கபடி படம் வரைந்து காண்பித்து, ஆர்டர்கள் பெற்றுக்கொள்வோம். மூன்று வருடங்களாக இதனை நடத்திக்கொண்டிருக்கிறோம். 16 பெண்கள் எங்களிடம் வேலை பார்க்கிறார்கள். மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடிகிறது” என்று கூறும் மினிக்கு 43 வயது. இவர் தனது தயாரிப்பிற்கு தேவையான மூலப்பொருட்களை சென்னை, கோவை, கொல்கத்தா போன்ற இடங்களில் இருந்து பெறுகிறார்.

Next Story