வீட்டிலேயே பெண்களுக்கான வேலைவாய்ப்பு - முயல் வளர்ப்பு


வீட்டிலேயே பெண்களுக்கான வேலைவாய்ப்பு - முயல் வளர்ப்பு
x
தினத்தந்தி 7 Jan 2018 12:45 PM IST (Updated: 7 Jan 2018 12:25 PM IST)
t-max-icont-min-icon

பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வேளாண் சார் தொழில்களை வீடுகளில் செய்து பெண்கள் வருவாயை ஈட்டி முன்னேறலாம். அந்த வகையில் முயல்களை வீடுகளில் இறைச்சிக்காக வளர்த்து பயனடையலாம்.

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவளிக்க மாற்று வழிகளை உருவாக்க வேண்டிய நிலையில் இன்றைய சூழல் உள்ளது. அதை ஈடுசெய்யும் வகையில் முயல் இறைச்சி உள்ளது. இறைச்சிக்காக முயல் வளர்த்து, பராமரித்து, விற்பனை செய்யும் விதம் பற்றி இந்த வாரம் பார்ப்போம்!

முயல் இனங்கள்:

நியூசிலாந்து வெள்ளை

வெள்ளை ஜெயன்ட்

சின்சில்லா

அங்கோரா

வளர்ப்பு முறை:

ஆழ்கூள முறை

கூண்டு முறை

ஆழ்கூள முறை:

இதற்கு தரைப்பகுதியை கான்கிரீட்டினால் அமைக்கவேண்டும். தரையில் 6 அங்குல அளவுக்கு நெல் உமி, மரத்தூள் போன்றவற்றை ஆழ்கூளமாக இடுதல் வேண்டும். கூண்டின் கீழ் அரை அடியில் உலோக தட்டுகளை வைத்து அதில் ஆழ்கூளமிட்டு முயல் கழிவை சேகரித்து அப் புறப்படுத்திடலாம்.

கூண்டு முறை:

இது சிறந்த முறையாகும். ஓரடுக்கு அல்லது ஈரடுக்கு கூண்டுகளில் முயல்களை வளர்க்கலாம். ஆண், பெண் முயல்களை தனித்தனி கூண்டுகளில் வளர்ப்பது நல்லது. தாய் முயல்களுக்கு கூண்டு அமைப்பு 2.5 அடி நீளமும், 2.5 அடி அகலமும், 1.5 அடி உயரமும் இருக்க வேண்டும்.

நமது சூழலுக்கு ஏற்ற முயல் எது?

சில வகை முயல்கள் சமவெளி பிரதேசங்களிலும், சில வகை மலைப் பிரதேசங்களி லும் வளர்வதற்கு ஏற்றவை. தமிழகத்தை பொறுத்தவரையில் நமது எல்லா மாவட்ட சீதோஷ்ண நிலைக்கும் நியூசிலாந்து வெள்ளை இன முயல்களே சிறந்தது.

பண்ணையை அமைக்கும் முறை:


குட்டிகள், வளர்கிற முயல்கள், இன விருத்திக்கான முயல்கள், சினை முயல்கள் இப்படி பல்வேறு பருவங்களில் இருக்கிற முயல்களுக்கு தனித்தனியாக கொட்டகை அமைக்கவேண்டும். மேலும் பண்ணையை விரிவுபடுத்திட தேவையான இடவசதி யையும் ஏற்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.




தேவையான ஊட்டச்சத்துக்கள்:


முயல்கள் எல்லாவிதமான பசுந்தீவன பயிர்கள், கேரட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகள், கிழங்குகளையும் விரும்பி தின்னும். அருகம்புல் போன்ற புல்வகை, பயறு வகை தீவனப்பயிர்களான வேலி மசால், முயல் மசால், குதிரை மசால், அகத்தி, காராமணி மேலும் பலா, முருங்கை, மல்பெரி இலைகள் மற்றும் காலிபிளவர் கழிவுகளையும் தின்னும்.

நன்கு வளர்ச்சி அடைந்த முயலுக்கு தினமும் 300 முதல் 400 கிராம் வரை தழைத் தீவனமும், குட்டிகளுக்கு 50 முதல் 250 கிராம் வரையும் தழைத்தீவனம் கொடுக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்:


வளர்ச்சியடைந்த பெண் முயல் ஆண்டுக்கு 5 முதல் 8 முறை குட்டிகளை ஈணும். சராசரியாக ஒரு முறை 6 குட்டிகளை பிரசவிக்கும். அனைத்து தட்ப வெப்ப நிலையையும் தாங்கி அவை வளரும். குறைந்த இட வசதி மற்றும் குறைந்த முதலீடு செய்து, குறுகிய காலத்திலேயே இவைகளை வளர்த்து கணிசமாக வருவாய் ஈட்டிட முடியும். 3 முதல் 4 மாதங்களில் ஒரு முயலில் 1.5 கிலோ முதல் 2 கிலோ வரை இறைச்சி கிடைக்கும். பெண்களுக்கு ஏற்ற ஒரு பண்ணை தொழிலில் இதுவும் ஒன்றாகும்.


இனவிருத்தி பராமரிப்பு:


10 பெண் முயல்களை இனவிருத்தி செய்வதற்கு ஒரு ஆண் முயல் போதுமானதாகும். 8 மாத பருவத்தில் இருந்து அவை இனப்பெருக்கத்திற்கு தயாராகும். ஆண் முயல்களை 2 முதல் 3 ஆண்டுகளுக்கு இனவிருத்திக்காக பயன்படுத்திடலாம். பெண் முயல்களை பொறுத்தவரையில் 6 மாத வளர்ச்சியிலேயே சினைப் பருவத்திற்கு தயாராகிவிடும். அதனை 3 ஆண்டு களுக்கு இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்திட முடியும். இதன் இனப்பெருக்க சுழற்சி 16 நாட்களாகும். அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பெண் முயலை, ஆண் முயலின் கூண்டிற்குள்விட்டு இனச்சேர்க்கைக்கு உதவவேண்டும். பெண் முயலுக்கான சினைக்காலம் 28 முதல் 32 நாட் களாகும்.



முயலைத் தாக்கும் நோய்களும், தடுக்கும் முறைகளும்:


சுவாச நோய்கள், சாக்சிடியா கழிச்சல், குடல் அழற்சி, மலச்சிக்கல், காதை தாக்கும் சொறி, சிரங்கு போன்றவை முயல்களை தாக்கும் நோய்கள். டெட்ரா சைக்கிளின் மற்றும் கார்டினால் போன்ற மருந்துகளை மாதம் ஒருமுறை தொடர்ந்து 3 நாட்கள் தண்ணீரில் கலந்து கொடுத்தால் சுவாச நோய்கள் மற்றும் கழிச்சலை கட்டுப்படுத்தலாம். முயல் கூண்டுகள், தீவன தொட்டிகள், தண்ணீர் பாத்திரங்களை தினமும் கழுவி சுத்தம் செய்யவேண்டும். தரமான தீவனங்களையும் முயலுக்கு அளிக்க வேண்டும்.

விற்பனையை மேம்படுத்தும் வழிமுறைகள்:


முயல் பண்ணையால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய விற்பனை வழிமுறைகள் தான் முக்கியம். அதாவது 10 பெண் முயல்களோடு 2 ஆண் முயல்களை வைத்து பண்ணை ஆரம்பித்தால், ஒரு வருடத்தில் 250-ல் இருந்து 300 முயல்கள் வரையில் கிடைக்கும். இந்த குட்டிகளை 100 நாட்களில் இருந்து 135 நாட்களுக்குள் இறைச்சிக்காக விற்றுவிடலாம். இதற்காக சரியாக திட்டமிட்டால்தான் வருவாயை பெருக்க முடியும்.

கல்லூரி, நட்சத்திர உணவு விடுதி, அசைவ உணவுக் கூடங்களில் தரமான முயல்களை மொத்தமாக தொடர்ந்து விற்பனை செய்யலாம். புதிதாக கண்டுபிடிக்கிற மருந்துகளை பரிசோதனை செய்யவும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை உணரவும் மருந்து கம்பெனிகளுக்கு முயல்கள் தேவைப்படுகின்றன. அவர்களும் முயல்களை விலைகொடுத்து வாங்குவார்கள். முயலின் தோல் அழகு சாதான பொருட்கள் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படுகிறது. வீடுகளுக்கும், விருந்து நடை பெறும் இடங்களுக்கும் முயல் இறைச்சி தேவைப்படுகிறது. வளர்ப்பவர்களே தனியாக கடை அமைத்து இறைச்சியாகவோ, சுவையான உணவுப் பொருளாக தயாரித்தோ விற்கலாம்.


பொதுவான ஆலோசனைகள்:


பிறந்தவுடன் முயல் குட்டி களுக்கு குளிர் மற்றும் குளிர் காற்றிலிருந்து பாதுகாப்பு அளிக் கவேண்டும். முடிந்த அளவுக்கு பசுந்தீவனம், கழிக்கப்பட்ட காய்கறிகளையே உணவாகத் தர வேண்டும். கழிக்கப்பட்ட காய் கறிகளை வேகவைத்து கொடுப்பது அவசியம். குட்டிகளின் இறப்பை தவிர்ப்பதோடு, வளரும் முயல் களின் எடையும் பெருமளவு அதிகரித்து விடாமல் கவனித்துக்கொள்ளவேண்டும்.

நவீன முறைகளில் நடத்தப்படும் பண்ணைகளில் முயல்களுக்கு அடர்தீவனம் வழங்கப்படுகிறது. வளர்ந்த முயல்களுக்கு தினசரி 120 கிராம் அடர் தீவனம் தேவைப் படுகிறது. அதனை குச்சித் தீவனமாகவோ, மாவு தீவனமாகவோ அளிக்கலாம். சரிபாதியாக காலை, மாலை நேரங்களில் வழங்க வேண்டும்.


இறைச்சி முயல்களுக்கான கலப்புத் தீவனக் கலவை:


100 கிலோ கலப்புத் தீவனம் தயார் செய்ய, 30 கிலோ உடைத்த மக்காச்சோளம், 30 கிலோ உடைத்த கம்பு, 13 கிலோ அரைத்த கடலைப் புண்ணாக்கு, 25 கிலோ கோதுமைத் தவிடு, 1.5 கிலோ தாது உப்பு, கிலோ உப்பு ஆகியவை தேவை. 4 முதல் 12 வாரம் வரையிலான குட்டி களுக்கு தினமும் 25 கிராம் தீவனமும், 13-வது வாரம் முதல் 6 மாதம் வரையிலானவற்றுக்கு 50 கிராமும், வளர்ந்த பெண், ஆண் முயலுக்கு 100 கிராமும், பாலூட்டும் முயலுக்கு 120 கிராம் வரையிலும் கலப்புத் தீவனம் கொடுக்கலாம்.

முயல்கள் தீவனம் உண்ணும் முறைகள் சுற்றுப்புற வெப்பத்தை பொறுத்து வேறுபடுகின்றன. குளிர் பிரதேசங்களில் வெப்பம் 5 முதல் 10 செல்சியஸ் ஆக இருக்கும் போது உலர் தீவனத்தை அதிக அளவில் உட்கொள்ளும். வெப்பம் அதிகமாகும் போது அளவை குறைத்து, குறைந்த அளவில் உணவு உட்கொள்கிறது. அவை உட்கொள்ளும் தண்ணீரின் அளவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப அதிகரிக்கவும், குறையவும் செய்யும். எனவே கோடைகாலத்தில் அதி காலை மற்றும் மாலை நேரங்களில் முயல்களுக்கு தீவனம் அளித்தி டவேண்டும். (அடுத்த வாரம்: வாத்து வளர்ப்பு முறை)


தகவல்:பி.முரளி, உதவி பேராசி ரியர், கால்நடை மருத்துவ அறி வியல் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையம், கடலூர்.

Next Story