ஊட்டி ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
ஊட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், நடைபெற்று வரும் ரூ.49 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்தலார் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் அம்மா பூங்கா மற்றும் கட்டப்பட்டு வரும் அம்மா உடற்பயிற்சி நிலையம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.22 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையை ஆய்வு மேற்கொண்டார்.
முள்ளிகூர் ஊராட்சி ஒன்றியம் நேருநகர் பகுதியில் தாய் திட்டத்தின் கீழ், ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நடைபாதையுடன் தடுப்புச்சுவர் பணி, பாரதி நகர் பகுதியில் ரூ.2.92 லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாய் பணி, காந்திநகர் பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நடைபாதையுடன் கழிவுநீர் கால்வாய் பணி, இந்திரா நகர் பகுதியில் ரூ.3 லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, அணிக்காட்டில் ரூ.2 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் பணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து பிக்கட்டியில் உள்ள ஆரம்ப பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு கூடம் மற்றும் அங்குள்ள பொருட்களின் இருப்பு, தரத்தினை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இந்த வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தினார்.