தூய்மையான பாரதம் திட்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 1,500 பேர் பங்கேற்பு


தூய்மையான பாரதம் திட்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 1,500 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 Jan 2018 2:30 AM IST (Updated: 8 Jan 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், தூய்மையான பாரதம் திட்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று காலை நடந்தது. இதில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 1,500 பேர் பங்கேற்று ஓடினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில், தூய்மையான பாரதம் திட்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று காலை நடந்தது. இதில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 1,500 பேர் பங்கேற்று ஓடினர்.

மாரத்தான் போட்டி

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான ‘தூய்மையான பாரதம்‘ விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. போட்டி பழைய துறைமுகம் முன்பு இருந்து தொடங்கி, துறைமுக பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது.

போட்டியை துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். போட்டி ஆண்கள், பெண்கள், மாணவர்களுக்கு என தனித்தனி பிரிவாக நடத்தப்பட்டன. இந்த போட்டியில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் இருந்து சுமார் 1,500 பேர் கலந்து கொண்டனர்.

பரிசு

இதில் ஆண்களுக்கான போட்டியில் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த மனோ முதல் பரிசையும், நெல்லை ரூபன் டேனியல் 2–வது பரிசையும், வெள்ளூரை சேர்ந்த அன்புசெழியன் 3–வது பரிசையும் பெற்றனர். பெண்களுக்கான போட்டியில் காட்டுநாயக்கன்பட்டி நடராஜ் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெயபாரதி முதல் பரிசையும், 2–வது பரிசை நெல்லை சுப்புலட்சுமியும், 3–வது பரிசை வீரவநல்லூர் முத்துமாரியும் பெற்றனர்.

மாணவர்களுக்கான போட்டியில் தூத்துக்குடி லசால் மேல்நிலைப்பள்ளி அஜித்குமார் முதல் பரிசையும், நெல்லை சந்தீப்குமார் 2–வது இடத்தையும், முத்து பொன்செல்வம் 3–வது இடத்தையும் பிடித்தனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சிறப்பு பரிசை கங்காதேவி என்பவரும் பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. விழாவில் துறைமுக பொறுப்புக்கழக அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story