நெல்லையில் பல்நோக்கு மருத்துவமனை விரைவில் திறக்கப்படும் புதிய டீன் கண்ணன் பேட்டி


நெல்லையில் பல்நோக்கு மருத்துவமனை விரைவில் திறக்கப்படும் புதிய டீன் கண்ணன் பேட்டி
x
தினத்தந்தி 8 Jan 2018 2:45 AM IST (Updated: 8 Jan 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பல்நோக்கு மருத்துவமனை விரைவில் திறக்கப்படும் என்று நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை புதிய டீன் டாக்டர் கண்ணன் கூறினார்.

நெல்லை,

நெல்லையில் பல்நோக்கு மருத்துவமனை விரைவில் திறக்கப்படும் என்று நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை புதிய டீன் டாக்டர் கண்ணன் கூறினார்.

புதிய டீன்

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ஆக இருந்த சித்திஅத்திய முனவரா கடந்த நவம்பர் மாதம் 31–ந்தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து பொறுப்பு டீனாக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய டீனாக கண்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

டாக்டர் கண்ணன் சொந்த ஊர் கடையம் அருகே உள்ள பாப்பாங்குளம். இவர் நெல்லை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.எஸ். படித்தார். பின்னர் இங்கேயே டாக்டராக பணியில் சேர்ந்து பணியாற்றினார். இங்கு சிறுநீரக அறுவைசிகிச்சை பிரிவில் தலைவராகவும், கல்லூரி துணை முதல்வராக பணியாற்றி உள்ளார். பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் டீன் ஆக பதவி உயர்வு பெற்று நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நியமிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் நெல்லைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய டீன் கண்ணன் நேற்று காலையில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மாற்று அறுவை சிகிச்சை

நான் படித்த, வேலை பார்த்த இந்த நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நான் டீனாக பொறுப்பு ஏற்று உள்ளது பெருமையாக உள்ளது. நான் இங்கு சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு தலைவராக இருந்த போது தான் இங்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. மூளைசாவு அடைந்தவரின் சிறுநீரகத்தை எடுத்து மற்றவருக்கு மாற்றியும் அறுவை சிகிச்சை செய்தோம். இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் அயராது உழைப்பேன்.

நெல்லை மண்டல புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அங்கு புதிய கருவிகள் வாங்கியதும் அந்த மண்டல புற்றுநோய் மையம் செயல்பட தொடங்கும். இருதய சிகிச்சை பிரிவில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

நெல்லை மருத்துவ கல்லூரியில் 33 துறைகள் உள்ளன. இதில் 16 துறைக்கு மட்டுமே உயர் கல்வி வசதி உள்ளன. இதற்கு 150 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மீதி உள்ள துறைகளிலும் உயர்படிப்பு கொண்டுவரப்படும். பி.எச்.டி. படிப்பும் கொண்டுவரப்படும்.

பல்நோக்கு மருத்துவமனை

நெல்லையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அதாவது பல்நோக்கு மருத்துவமனை ரூ.150 கோடியில் அமைக்க அரசு உத்தரவிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பல்நோக்கு மருத்துவமனைக்கான கட்டிடம் கட்டும் பணி 90 சதவீதம் முடிந்துவிட்டது. மீதி உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அதற்கு தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டு மருத்துவமனை திறக்கப்படும். அந்த மருத்துவமனை திறக்கப்பட்டால் தென்மாவட்ட மக்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது துணைமுதல்வர் டாக்டர் ரேவதி உடன் இருந்தார்.


Next Story