பாபநாசம், மணிமுத்தாறு வனப்பகுதியில் அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை


பாபநாசம், மணிமுத்தாறு வனப்பகுதியில் அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Jan 2018 2:00 AM IST (Updated: 8 Jan 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம், மணிமுத்தாறு வனப்பகுதிகளில் அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குகர் பார்கவ தேஜா தெரிவித்துள்ளார்.

அம்பை,

பாபநாசம், மணிமுத்தாறு வனப்பகுதிகளில் அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குகர் பார்கவ தேஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அம்பை வனத்துறை அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சீரமைப்பு பணிகள்

ஒவ்வொரு ஆண்டும் மணிமுத்தாறு, பாபநாசம், காரையாறு உள்ளிட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆறு, அருவி ஆகியவற்றில் காணும் பொங்கலன்று பொதுமக்கள் தங்களது உறவினர்கள், நண்பர்களுடன் சுற்றுலா வருவது வழக்கம். வனப்பகுதிகளிலும், அருவி, ஆறு உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்கள் ஆபத்து அறியாமல் சென்று விபத்து நடக்கும் நிலை உள்ளது.

இந்த நிலையில் மணிமுத்தாறு அருவி ஒகி புயலால் பாதிக்கப்பட்டு சேதமடைந்து உள்ளது. அதனை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பொங்கலுக்குள் பணிகள் நிறைவடையும் நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர். பணிகள் முடியாவிட்டால் அருவியை பார்க்க மட்டும் அனுமதிக்கப்படுவர்.

நடவடிக்கை

மேலும் அகஸ்தியர் அருவி, கல்யாணதீர்த்தம், முண்டந்துறை, சொரிமுத்து அய்யனார் கோவில், காரையாறு அணை உள்ளிட்ட வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஆபத்தான இடங்கள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படும்.

மேலும் ஒவ்வொரு இடத்திலும் பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபடுத்தப்படுவர். தடையை மீறி ஆபத்தான பகுதி மற்றும் தடை செய்யப்பட்ட வனப்பகுதிகளுக்குள் செல்பவர்கள் மீது வனப்பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே பொதுமக்கள் வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து காணும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும், களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம் குறித்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணைய தளம் சுற்றுலா பயணிகள், வன ஆர்வலர்கள் உள்ளிட்டோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் காலங்களில் சுற்றுலா பயணிகளின் தேவை மற்றும் பாதுகாப்புகளை தெரிந்து அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story