தஞ்சை மாவட்டத்தில் 93 சதவீத அரசு பஸ்கள் இயங்கியது பொதுமக்களின் இயல்பு நிலை திரும்பியது


தஞ்சை மாவட்டத்தில் 93 சதவீத அரசு பஸ்கள் இயங்கியது பொதுமக்களின் இயல்பு நிலை திரும்பியது
x
தினத்தந்தி 8 Jan 2018 4:30 AM IST (Updated: 8 Jan 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் அதிகஅளவில் தேர்வு செய்யப்பட்டதால் தஞ்சை மாவட்டத்தில் 93 சதவீத அரசு பஸ்கள் இயங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்புநிலை திரும்பியது.

தஞ்சாவூர்,

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இணையாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ.7 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழகஅரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த 4-ந் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வந்தால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என தொழிற்சங்கத்தினர் அறிவித்து நேற்று 4-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளை தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கத்தினரும் வேலைக்கு செல்லவில்லை. இவர்கள் பொதுஇடங்களிலும், பணிமனை பகுதியிலும் கூடி நிற்கக்கூடாது என்றும், அப்படி ஒன்று கூடினால் கைது செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இதனால் தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒன்று கூடி நேற்று 2-வது நாளாக ஆலோசனை நடத்தினர்.

இதில் தி.மு.க. முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், மாநகர செயலாளர் நீலமேகம், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முருகேசன், சமவெளி விவசாயிகள் சங்க நிர்வாகி பழனிராஜன், மாநகர மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் பழனியப்பன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் நல்லதுரை மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர். தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் பாண்டியன், மாவட்ட செயலாளர் சேவியர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

தஞ்சை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தஞ்சை புறநகர், நகர்கிளை-1, நகர்கிளை-2, கும்பகோணம் புறநகர், நகர்கிளை-1, நகர்கிளை-2, ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவையாறு, தஞ்சை விரைவு போக்குவரத்து கழகம், கும்பகோணம் விரைவு போக்குவரத்து கழகம் என 12 பணிமனைகள் உள்ளன. இவற்றில் இருந்து 528 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போராட்டம் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அரசு பஸ்களை முழு அளவில் இயக்குவதற்காக தற்காலிகமாக டிரைவர்கள், கண்டக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்கள் கனரக வாகன ஓட்டுனர் உரிமம்(அசல்), வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு பெற்றமைக்கான சான்று மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் பெற்ற கையெழுத்து ஆகியவற்றுடன் ஒவ்வொரு பணிமனைக்கும் நேரில் சென்றனர். அங்கு தற்காலிக மையம் அமைக்கப்பட்டு அதிகாரிகளும், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும் அமர்ந்து இருந்தனர். இவர்கள் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்களிடம் இருந்து ஆவணங்களை பெற்று தற்போது வசிக்கும் முகவரிகளையும் பெற்று கொண்டனர்.

பின்னர் டிரைவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களிடம் அரசு பஸ் கொடுக்கப்பட்டு, பஸ்சை எப்படி ஓட்டுகிறார்கள் என சோதனை செய்யப்பட்டது. அப்போது வளைவுகளில் எப்படி செல்கிறார்கள், பஸ் நிறுத்தத்தில் எப்படி நிறுத்துகிறார்கள், எதிரே வரும் வாகனத்திற்கு எப்படி வழிவிடுகிறார்கள், குறுக்கே வாகனங்கள் வந்தால் எப்படி பிரேக் போட்டு நிறுத்துகிறார்கள் என போக்குவரத்து அலுவலர்கள் நேரில் பார்த்தனர். இந்த சோதனையில் முழுமையாக தேர்ச்சி பெற்ற டிரைவர்கள் மட்டுமே அரசு பஸ் இயக்க அனுமதிக்கப்பட்டனர். சரியாக அரசு பஸ்சை ஓட்ட முடியாதவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லாரி டிரைவர்கள், தனியார் பஸ் டிரைவர்கள், டிராக்டர் ஓட்டுனர்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் அரசு பஸ்களை இயக்க வந்திருந்தனர்.

தஞ்சை நகர்கிளை-1, நகர்கிளை-2 ஆகியவற்றில் 40 டிரைவர்கள், 40 கண்டக்டர்களும், புறநகர் கிளையில் 30 டிரைவர்கள், 30 கண்டக்டர்களும் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல் ஒவ்வொரு பணிமனையிலும் சுமார் 25 முதல் 40 டிரைவர்களும், கண்டக்டர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மட்டுமின்றி அண்ணா தொழிற்சங்கத்தினரும் பஸ்களை இயக்கினர். தஞ்சை மாவட்டத்தில் 92.58 சதவீத பஸ்கள் ஓடின. கண்டக்டர்கள் பணம் வைக்க தோல் பை இல்லாமல் துணி பை போன்றவற்றை பயன்படுத்தினர். தனியார் பஸ்கள், மினிபஸ்கள், ஷேர்ஆட்டோக்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. ஆனால் இவற்றில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். பொதுமக்களின் இயல்புநிலை மீண்டும் திரும்பியது. 

Next Story