தற்காலிக ஓட்டுனர் மூலம் உடுமலையில் 65 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்


தற்காலிக ஓட்டுனர் மூலம் உடுமலையில் 65 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 8 Jan 2018 4:00 AM IST (Updated: 8 Jan 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் 65 சதவீத அரசு பஸ்கள் தற்காலிக ஓட்டுனர் மூலம் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் பல்வேறு ஊர்களுக்கு போக முடியாமல் தவித்தனர்.

உடுமலை,

அரசு போக்குவரத் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதை தொடர்ந்து அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

அரசு போக்குவரத்து கழகம் உடுமலை கிளையில் 104 பஸ்கள் உள்ளன. இங்கு சுமார் 600 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். வேலை நிறுத்தம் காரணமாக பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. இதையடுத்து பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொழிற்சங்கத்தை சேர்ந்த 25 தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு வந்து இருந்தனர். அதனால் தனியார் பள்ளிகளின் பஸ் ஓட்டுனர்கள், டிராவல்ஸ் நிறுவனங்களின் ஓட்டுனர்கள் உள்ளிட்ட 75 ஓட்டுனர்கள் அரசு பஸ்களை இயக்க தற்காலிக பணிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களை கொண்டு மதியம் 12 மணிவரை 65 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கான பணிகளை அரசு போக்குவரத்து கழக உடுமலைகிளை மேலாளர் சவுந்தர்ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் அ.தி.மு.க. போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் மேற்கொண்டனர். தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. மினி பஸ்களும் மத்திய பஸ் நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றி சென்றது. பஸ்கள் கால அட்டவணைப்படி இயக்கப்படவில்லை.

உடுமலை பணிமனையில் 65 சதவீத பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டாலும் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். சிலர் தங்களது வெளியூர் பயணத்தை ரத்து செய்தனர். சில பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு போக முடியாமல் தவித்தனர்.

அரசு போக்குவரத்து கழக உடுமலை கிளையில் 600 தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் அ.தி.மு.க. தொழிற்சங்கத்தினர் பணிக்கு வந்துள்ளனர். சிலர் மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, போன்ற விடுப்புகளில் உள்ளனர். பணிக்கு வரவேண்டிய தொழிலாளர்களில் எந்த வித முன் அறிவிப்பு மற்றும் தகவல் இல்லாமல் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தால் ஈடுபட்டுள்ள 520 தொழிலாளர்களின் பெயர்பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் உள்ள தொழிலாளர்கள் மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.


Next Story