நிதி பற்றாக்குறையிலும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் - கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
நிதி பற்றாக்குறையிலும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு முடிந்த அளவுக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கடத்தூர்,
ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட 1 லட்சத்து 9 ஆயிரத்து 349 ரேஷன் கார்டுதாரர்களுக்கு கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி–சேலை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
விலையில்லா வேட்டி–சேலை வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். அவருக்கு பிறகு முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசில் பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்குதல், பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பொருள் வழங்குதல் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
தற்போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோபி பகுதியில் 90 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்கள் பலர் முழு மனநிறைவோடு பணியாற்றுகிறார்கள். அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்ற இந்த அரசுக்கு மனம் உள்ளது. ஆனால், நிதி பற்றாக்குறை இருந்தாலும், முடிந்த அளவுக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
இந்த ஆட்சிக்கு இடையூறு செய்ய ஒரு சிலர் முயன்று வருகிறார்கள். அவர்களின் கனவு பலிக்காது. பள்ளி பாடத்திட்டங்கள் இன்னும் 2 ஆண்டுகளில் மாற்றியமைக்கப்படும். 805 பள்ளிகளில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி படிப்பு முடித்த பின், என்ன படிக்கலாம் என்பது குறித்து தகவல் பலகைகள் வைக்கப்படும். மாணவர்கள் மரக்கன்று நடும் திட்டம் குறித்து முதல்–அமைச்சரிடம் ஆலோசிக்கப்படும். 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். கொடிவேரி அணை சுற்றுலா தலமாக்கப்படும். இந்த அரசு அனைத்து திட்டங்களையும் மக்களை நாடி கொண்டு செல்கிறது.
இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.